Sustainable Agriculture

Community Based Rehabilitation

New Thrust IV Phase

வாழ்வில் வசந்தம் காண...

1. மகிழ்ச்சி :
“அன்பு செய்ய ஓர் ஆளும்
செயல்பட ஒரு பணியும்
எதிர்பார்ப்புக்கொரு இலக்கும்
மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவைகளாம்.”   இமானுவேல் காண்ட்

மகிழ்ச்சி என்பது வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், இன்பம், நிறைவு என பல பொருளில் கூறலாம். மனிதவாழ்வில் ஒவ்வொரு ஜீவனும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றன. மகிழ்ச்சியை தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே மகிழ்வைத் தேடும் படலத்தில் மனித குலம் வெற்றி பெற்றுள்ளதா ? என்கிறபோது சரியான பதிலை கூற முடியாமல் நின்று விடுகிறது.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடுகிறோமே ; எங்கு கிடைக்கிறது ? என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். முடியுமா ? இது என்ன பொருளா ? விலை கொடுத்து வாங்குவதற்கு. அது ஓர் இனம்புரியாத உணர்வு. அதை வெளியே தேடிச்செல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தேட வேண்டும். “மகிழ்ச்சி சூழ்நிலைகளால் வருவதில்லை, உள்ளத்தால் ஏற்படுவதுண்டு. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் மகிழ்வடையச் செய்வதில்லை. உள்ளத்தில் இருந்து வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும், நாம் எது எது வைத்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி ஏற்படாது, எப்படி அதனைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது” என்கிறார் ய­ய்க் என்ற அறிஞர். ஆகவே மகிழ்ச்சியை நமது உள்ளத்தில்தான் தேட வேண்டும் என்பது புலனாகிறது.

தேர்வினில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல்வனாக வரும்பொழுது பெரிதும் மகிழ்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கின்றனர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டால் மகிழ்கின்றனர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து நல்ல விலைக்கு விற்றால் மகிழ்கின்றனர். இப்படியாக எல்லோரும் ஏதாவது ஒன்றில் மகிழ்கின்றனர். இது போதுமானதா ? இது நிறைவை தந்துவிடுமா ? இது நிரந்தரமானதா ? இல்லை. அப்படியயனில் நிரந்தர மகிழ்ச்சியை எப்படி உருவாக்க முடியும் ?. நிரந்தர மகிழ்ச்சி என்றால் துன்பமே இல்லை என்பதல்ல. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆனால் துன்பத்தை களைந்து இன்பத்தில் எப்படி வாழ்வது என்பதில்தான் வாழ்வு அடங்கியிருக்கிறது. ஆகவே நிம்மதியை தருகின்ற நிறைவை தருகின்ற மகிழ்ச்சியை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஒரு புகழ் வாய்ந்த அரசன் வசதிகள் அனைத்தும் நிரம்ப பெற்றிருந்தான். ஆனால் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டான். சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே ஒரு முனிவரிடம் கேட்டான். அதற்கு அம்முனிவர் ‘மகிழ்ச்சியாக வாழும் ஒருவரின் மேலாடையை ஒரு நாள் முழுவதும் நீ அணிந்திருக்க வேண்டும்’ என்றார். படை வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பவனை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தான். படை வீரர்கள் எத்திசையிலும் தேடியும் எவனும் கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வரும்பொழுது மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த பிச்சைக்காரனைக் கண்டனர். அவனிடம் விவரம் சொல்லி அவனது மேலாடையை கொண்டு வந்தனர். அந்த மேலாடையில் பல ஓட்டைகளும், தையல்களும் இருந்தன. பின் பக்கத்தில் பாதி துணியே இல்லை.

ஆம், மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, பட்டம், செல்வங்கள் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக உள்ளதை உள்ளவாறு ஏற்று நிறைவடையும் நல்ல மனம் மட்டும் தேவை என்பதை அப்பிச்சைக்காரன் உணர்த்தினான். மகிழ்ச்சி சிறிய சிறிய நற்செயல்களால் உருவாகும். அதாவது ஆதரவு வார்த்தைகளால், இறக்கம் கொண்ட செயல்களால், பிறரைப் புண்படுத்தாமல், பிறருக்காக சிறிது நேரம் ஒதுக்குவதால், பிறரின் துயரத்திற்கு செவிமடுப்பதால், நல்ல ஆலோசனை வழங்குவதால் ஆகிய இவைபோன்ற செயல்களால் மகிழ்ச்சி உருவாகும். இப்படிபட்ட பண்புகளை வாழ்வில் வளர்த்துக்கொள்வோம்.

ஒரு மனிதனின் முகம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். எனவேதான் மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரிக்கின்றோம். துயரத்தில் இருக்கும் போது சோகமாக இருக்கின்றோம். கோபத்தில் இருக்கும்போது இறுக்கமாக இருக்கின்றோம். மகிழ்ச்சி வெளிப்படுத்தும் சிரிப்பை கடவுள் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார். எனவேதான் பெரியவர்கள் “சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோயில்” என்பார்கள். ஏனெனில் சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தாங்கி நிற்கிறது. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே மகிழ்ச்சியை தமதாக்கிக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

“பகிர்ந்து வாழும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்பார்கள். எனவே நமது மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கவேண்டுமானால் நாம் பிறர் நல செயல்களில்
ஆர்வம் காட்டவேண்டும். பிறரது துயரத்தில் பங்கேற்கும்பொழுது, இருப்பதை பிறரோடு பகிரும்போது, திறந்த மனநிலையோடு பேசும்பொழுது, ஆதரவு
வார்த்தைகள் கூறும்பொழுது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம். அம்மகிழ்வில் பங்கு பெறுகிறோம்.
இன்றைய எதார்த்த நிலை என்ன ? சோர்ந்து போன முகத்துடன் நடக்கின்றனர் பலர். நடை பிணங்களாக வாழ்கின்றனர் சிலர். விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர் இன்னும் சிலர். துயரத்தையே வாழ்வாக்கிக் கொண்டனர் பலர். ஏன் நிரந்தர நோயாளியாகவே மாறிவிட்டனர் பலர். காரணம் மகிழ்ச்சி இல்லை. இவர்களிடம் பதவி, பணம், பலம், அதிகாரம், அந்தஸ்து இருக்கின்றது. ஆனால் அன்பு செய்ய ஆள் இல்லை. எனவேதான் சூம்பிய வாழ்வை கொண்டுள்ளனர். எனவே அன்புக்கு அயலான் இருக்க வேண்டும். அவனோடு வாழ்வை பகிரவேண்டும். அப்போதுதான் மகிழ்வை நிரந்தரமாக்க முடியும்.

மெர்லின் மன்றோ ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை அதிக பணம் சம்பாதித்ததால் மக்கள் அவளை புகழ்ந்தார்கள். திரை உலகம் அவளுக்கு பல புதிய வாய்ப்புகளை அளித்தது. அவளை கண்டு உலகம் மகிழ்ந்தது. ஆனால் அவளது உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தன்னையே அழித்துக்கொண்டாள். உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்த நடிகை, மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்க முடியவில்லை. காரணம் அவளை அன்பு செய்ய ஆள் இல்லை. பகிரும் மனம் அவளிடம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை பகிர ஆள் இல்லை. விளைவு மரணத்தை தழுவிக்கொண்டாள். பகிரும் பொழுது மனம் மகிழ்கிறது. இதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.

மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ள, துன்பங்களை, துயரங்களை வேதனைகளை, வருத்தங்களை, விரக்திகளை களைந்து மகிழ்ச்சி கொள்ள சில வழிகள் :

* மனதை ஒழுங்குபடுத்த யோகா செய்யுங்கள்.
* இதமான இசையைக் கேளுங்கள்.
*      இயற்கையை ரசித்து பாருங்கள்
* குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
* பிள்ளைகளோடு விளையாடுங்கள்
* இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்.
இவை அனைத்தையும்விட
* அயலானோடு பகிர்ந்து அன்பு செய்யுங்கள்.
* பிறர் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.
* எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
* மனம் சற்று கனமாக இருந்தால் நீங்கள் நம்புகிற ஒருவரிடம் பகிர்ந்து தன்னம்பிக்கை பெறுங்கள்.
(வசந்தம் காண வழிகள் மேலும் தொடரும்...)