மக்களை அதிகாரப்படுத்துதல்

“மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு. நினைவுப்படுத்தி
தூண்டிக் கொண்டே இருப்பது
எம் கடமை”

மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது இன்று நேற்று உதிர்க்கப்பட்ட சொற்றொடர் அன்று. நமது நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றது.
“சாதாரண அடித்தட்டு மக்களை மய்யப்படுத்தி அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக செய்யப்படும் பணியே அதிகாரப்படுத்துதல் ஆகும்.
இதை அழகாக நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் பின் வருமாறு கூறியுள்ளார்.
“அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரப்படுத்துதல் என்பது அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது”
எனவே அதிகாரப்படுத்துதல் என்பது கீழ்க்கண்ட பொருளை உள்ளடக்கியது.

1. வாய்ப்புகளை உருவாக்குவது
2. திறமைகளை வளர்ப்பது
3. வாழ்வியல் தேவைகள்
இம்மூன்றின் மூலமாக “மக்களை அதிகாரப்படுத்துதல்” என்பது நடைபெறும்.
அதிகாரம் அற்றவர் யார் ? யார் அதிகாரப்படுத்த வேண்டும் ? என்ற கேள்விக்கு விடை காண ஆராயும் போது பலர் அதிகாரப்படுத்தப்படவேண்டிய சூழலில் உள்ளனர்.
1. பெண்கள்
2. தலீத் மக்கள்
3. விவசாய கூலித் தொழிலாளர்கள்
4. விவசாயிகள்
இவர்களை ஒட்டு மொத்தமாக கூற வேண்டுமானால் “வாழ்வின் விளிம்பில் பரிதவித்து நிற்கின்ற பாவப்பட்ட மக்கள்” எனக் கூறலாம். பாகுபாட்டினால்
பெண்களும், சமூக அந்தஸ்து இன்றி தலீத் மக்களும் உழைப்பிற்கு ஏற்ற பகிர்வு இன்றி கூலித் தொழிலாளர்களும், முதலீட்டிற்கு ஏற்றார் போன்று வருவாய் இன்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு அதிகாரமற்றவர்களாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களே இன்றைய சூழலில் தீர்மானம் செய்ய முடியாமல் முடிவெடுக்க முடியாதவராய் காட்சி தந்து வருகின்றனர்.
இப்பிரிவினரே சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் அதிகாரம் பெற வேண்டுமானால் இன்றைய கால கட்ட சமூக அமைப்பிலிருந்து விடுபட்டு வெளியேறினாலே போதும் எனவும் கூறலாம்.

அதிகாரம் எப்படி :
இம்மக்களை அதிகாரப்படுத்த பல வழிமுறைகள் இன்று கையாளப்பட்டு வருகின்றன அவை.

பொருளாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாற பொருளாதார மேம்பாடு அத்தியாவசியமான ஒன்றாகும். பொதுவாக பொருளாதார மேம்பாடு
அ) சேமிப்பு
ஆ) அரசு திட்டம் பெறுதல்
இ) தொழில் வாய்ப்பு உருவாக்குதல்
சேமிக்காத மனிதன் கூரை இல்லாத வீட்டிற்கு சமம் என்று கூறுவர். ஆம் இன்றைய சூழலில் மனிதனின் செலவினம் பல வழிகளில் விரயம் மற்றும் ஆடம்பரங்களால் உருவாக்கப்படுகிறது. இதனால் பணம் பல வழிகளில் வீணடிக்கப்படுகிறது. எனவே, இப்பணத்தை சேமிப்பதின் மூலம் பண வளம் உள்ளவனாக மாற முடியும். இதன் மூலம் அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும்.
இச்சேமிப்பு தனி நபர் அளவில் என்பதைவிட குழு அளவிலான சேமிப்பாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று நாணய சங்கமாக செயல்பட முடியும். இச்செயல்பாட்டின் தேவைகளை ஒருவருக்கொருவர் அடைய முடியும். தேவையின் அடிப்படையிலான பணிகள் நடைபெறும் போது ஏழை எளிய மக்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாற முடியும்.
அரசு திட்டங்கள் கூட மனிதர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு மூலம் அரசிடம் உள்ள நலத்திட்டங்கள் எதற்காக
எப்படி பயன்படுத்துவது என்று எண்ணத் தோன்றி அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமைகளாக அரசு திட்டங்கள் அடையாளம் காட்டப்படவேண்டும். அரசு திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை உயர்த்தி வளர்ச்சிகளில் அவர்களை பங்காளியாக்கி பயன்பெறச் செய்து அதிகாரப்படுத்த இயலும்.
தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டுவதும் பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகும். உள்ளூரில் உள்ள, தங்களது சுற்றுப்புறங்களில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி தொழில் துவங்க மக்களுக்கு வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும்.

சமூக மேம்பாடு :
சமூக மேம்பாடும் மக்களின் அதிகாரப்படுத்துவதற்கான ஆயுதமாக உள்ளது. இன்றைய சமூக நிலை ஏற்றத்தாழ்வு உள்ளதாக, சமத்துவம் அற்றதாக உள்ளது. ஆண், பெண் வேறுபாடு, இன வேறுபாடு, ஏழை ‡ பணக்கார வேறுபாடு, கல்வியின்மை, நீதியின்றி அவலமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. இக்காட்சியின் கதாநாயகர்களாய் நமது மக்கள் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இச்சமூக அவல நிலையிலிருந்து மக்களை மீட்காமல் அவர்களை அதிகாரமுள்ளவர்களாக மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
பெண்களின் நிலை உயர்த்தப்பட்டு, சம கூலி, சம அந்தஸ்து, அதிகார பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும். சாதாரண சாமான்ய மக்களை மய்யப்படுத்துகின்ற சமூகமாக மாற்ற முயற்சி எடுத்தல் அவசிய தேவையாக உள்ளது. ஜாதிப் போர்வையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டுமானால் தாழ்ந்தோர் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். உழைப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் உற்பத்தி முழுமையடையாது என்ற உணர்வு மக்களிடம் ஊட்டப்பட வேண்டும். இவைகள் முழுமையாக நடைபெறும் காலமே அதிகாரம் கிடைத்ததற்கான காலமாக அமையும்.

மனிதவள மேம்பாடு

பொதுவாக மனிதர்களிடம் அச்ச உணர்வு பெரும்பான்மையாக உள்ளது. சமூகத்தை பார்க்கின்ற பார்வையிலும் வேறுபாடு உள்ளது. சமூக அறநெறிகளிலிருந்து மாறுபட்டு செல்கின்ற நோக்கும் தென்படுகிறது. இவைகள் மாறுபடுகின்றபோது அதிகாரப்படுத்துதல் பணி எளிதாக அமையும்.
இவைகளை நீக்க மனிதர்களுக்குள் இருக்கின்ற மனித வளங்கள் வீறு கொண்டு எழ வேண்டும். மனித வளங்களான ஆற்றல், அறிவு, திறன்கள் வெளிக்கொணரப்படவேண்டும். இவை மூன்றுமே எதனையும் சிந்திக்க தூண்டுவதாகும். நமது சமூகத்தில் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டும் கருவியாக உள்ளதுதான் மனித வளங்கள், பண்பாட்டு வீழ்ச்சியும், ஒழுக்க குறைவும் மக்கள் பெற வேண்டிய அதிகாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. அதிகாரமற்றவர்களாய் நாம் இருப்பதினால் இழந்தது என்ன என்பதை சிந்திக்க மனித வளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே மனித வள பயன்பாடு அதிகாரப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது.

வாழ்வாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்றைய கால கட்டத்தில் கவலை தரக்கூடியதாக உள்ளது. தன் சுத்தம், சுகாதார வாழ்வு போன்றவையும், நலவாழ்வு வாழ்வதற்கான சூழலும் இன்றைய தினம் மிக குறைவாகவே உள்ளது. பொதுவாக வாழ்வாதாரம் என்று கூறினாலே பணம் பொருள் என்பது மட்டுமே என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் அவை உடல் நலம் மற்றும் சுகாதாரத்தையும் உள்ளடக்கியதுதான்.
மனிதனின் இன்றைய வாழ்வில் சத்துணவு உண்ண வழியில்லை. சுகாதார வாழ்வு கேள்விக் குறியாக உள்ளது. உயிர்வாழ முக்கிய தேவையான நீரைக்கூட சந்தேகமில்லாமல் அருந்த முடியவில்லை. நோயுற்றோர்க்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள், சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட கிடைக்கவில்லை.
நாளொன்று அருந்த வேண்டிய, உண்ண வேண்டிய உணவு கிடைக்கவில்லையயன்றால் கூட பரவாயில்லை. தினமும் பட்டினியின்றி படுக்கைக்கு செல்ல முடியாத வெட்க கேடான சூழலே நிலவி வருகின்றது. அதிகாரம் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து வரும் ? என்று இவை எல்லாம் கிடைக்கின்றதோ அன்றுதானே அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும். ?

அரசியல் மேம்பாடு :
தீர்மானிக்கும் மற்றும் முடிவெடுக்கும் மக்களாக நாம் மாறிடும்போது உண்மையான அரசியல் மேம்பாடு அடைந்துவிட்டதாக பொருள் கொள்ள கூடும். கிராம அளவிலான அரசியலில் பெண்களும், தலீத் மக்களும் மற்றும் நமது இலக்கு மக்களும் பங்கு பெற முடிகின்றதா ?

மேலோட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு பெற்றாலும் அவர்களால் முடிவெடுக்கும் சூழலில் உள்ளனரா ? தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் மாறிவிட எண்ணியபோதும் முடியவில்லை. காரணம் அரசியல் என்பது இன்றும் கூட சிலரின் கரங்களில்தான் உள்ளது.
அரசியல் மேம்பாடே நமது மக்களின் அதிகாரத்திற்கு வித்திடும் என்பதில் என்றும் எள்ளளவு கூட சந்தேகம் நமக்கு எழக்கூடாது.
மேற்கூறிய எல்லாம் எப்போது நடைபெறும் என்ற சந்தேகம் நமக்குள் நெடுங்காலமாக எழுந்துள்ளது.
கார்ல்மார்க்ஸ் முன்பே நமது தெற்காசிய நாடுகளை பார்த்து கூறியுள்ளார். “குரங்குகளையும் மாடுகளையும் வணங்கும் மக்கள் இருக்கும் வரை சமூக, பொருளாதார, அரசியல் கலாச்சார அமைப்புகளிலிருந்து விடுபட முடியாது” இப்படித்தான் இன்று வரை உள்ளது கலாச்சார அமைப்பு.

மக்கள் அமைப்பு :
இவற்றிற்கு மாற்றாக மக்கள் அமைப்பு உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற அமைப்பு மக்களால் ; மக்களுக்காக ; மக்களுடையதாக உருவாகின்ற அமைப்பாக இருக்க வேண்டும். அமைப்பின் மூலமாக மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு, பொருளாதார மேம்பாடு சமூக மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, மனித வள மேம்பாடு, அரசியல் மேம்பாடு, நிலைத் தன்மையுடையதாக மாற்றப்படும். பொது வாழ்வில் நமது செயல்பாடு தரம் குறைந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பொது வாழ்வின் தரத்தினை மீட்டெடுக்க முடியும்.
அதிகாரப்படுத்துதல் என்பது அரசால் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டாலும், தங்களின் வாழ்வின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் பெரும்பான்மை மக்களுக்கான சம வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்காமல் மக்களை அதிகாரப்படுத்தவது கடினமாகும்.
விளைவு :
அதிகாரப்படுத்துதலினால் மக்கள் கீழ்கண்டவாறு உரிமைகள் பெறுவர்.

1. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம்
2. அடிப்படை வழிமுறைகள் உருவாக்கப்படும்
3. ஜனநாயக வழிமுறைகள்
4. திட்டங்கள் கீழிலிருந்து துவக்கம்
5. சமூக பொருளாதார முன்னேற்றம்

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்.