தொழிலாளி - மேசை துடைக்கும் குழந்தை


துள்ளி சென்றே பயிலும் வயதில்

துடைக்க வந்துவிட்டான் - மேசை

துடைக்க வந்துவிட்டான் - ஐயோ !

கொல்லன் உலையாய்க் கொதிக்கும் நெஞ்சில்

கொட்டி எரித்துவிட்டான் - ஆசையைக்

குறைவறப் போக்கி விட்டான்

கண்ணைத் திறந்தே உலகைக் காட்டும்

கல்வியை இழந்துவிட்டான் - சோகக்

கதையாய் உருவெடுத்தான்

அன்னை தந்தை ஏற்றிய சுமையை

அரும்பில் சுமக்கிறான் - துயரில்

ஆழ்ந்து நெளிகின்றான்

எட்டாக் கிளையில் கிட்டாக் கனியாய்

இருக்கும் கல்வியினை - உண்டால்

இனிக்கும் நல்லமுதைத்

தொட்டுப்பிடித்துச் சுவைத்து மழைத்

துணைவருவார் யாரோ ? - இவன்

துயர்தீர்ப்பார் யாரோ ?

வி.ஜெனிட்டா