ஆசிரியர் பேனா

நெஞ்சில் நிறைந்த வாழ்த்துகளோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் என் எழுத்துக்களால் உங்களோடு உரையாடுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்திய தேசத்தில் ஒரு வரலாறு படைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதாவது மாநிலங்களவையில் “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா” நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்று. இம்மசோதா கடந்து வந்த பாதைகள் 14 ஆண்டுகள். ஆனால் பெண்களுக்கான மசோதா ஒன்று தேவை என்பதை 1974 ஆம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டது. அன்று முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் 8ம் தேதி வரை பல எதிர்ப்புகளை சந்தித்து தற்போது வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியே. இதனால் இந்திய ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தியாவில் தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் 9.0% விகிதமும் மக்களவையில் 10.8% விகிதிமும்தான் உள்ளன. எனவே விரைவில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு 33 % இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்கள் அனைத்து துறைகளிலிலும் பங்கெடுக்க வாழ்த்துகிறோம்.
மக்களை அதிகாரப்படுத்துதல் மிகவும் அவசியமானது. ஏனெனில் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே உணர்ந்து பெற்று வாழ வேண்டும். மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது திட்டமிடுதல், முடிவெடுத்தல், செயல்படுதல் போன்ற அனைத்து மட்டங்களிலும் ஈடுபடசெய்வதேயாகும். இந்நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். குறிப்பாக பெண்கள் ஈடுபடவேண்டும்.
போலி மருந்துகள் விநியோகம் மலிந்துள்ள சூழலில் எச்சரிக்கையாக இருங்கள். எந்த மருந்துகளை வாங்கினாலும் கவனமுடன் ஆராய்ந்து வாங்குங்கள். இதைவிட எளிய வகையில், குறைந்த செலவில் மூலிகை மருத்துவம் பயன்படுத்தி நலம் பெற்று வாழுங்கள். விவசாயத்திற்கு இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி பயனடையுங்கள்.
மாணவச் செல்வங்களே, புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொள்கையாக கொண்டு படியுங்கள். அதிக மதிப்பெண் பெறுவேன் என்று உறுதி கொண்டு உழையுங்கள். வெற்றி உங்களதே.
இந்நேரத்தில் நன்றி நிறைந்த நெஞ்சத்தோடு அருள்தந்தை A.மார்டின் தே போரஸ் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக லுனிறீறீறீ நிறுவனத்தை புதிய யுக்திகளோடு வழிநடத்தி தற்பொழுது குடந்தை பேராலய பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுள்ளார்கள். நம் நிறுவனத்திற்கு ஆற்றிய தொண்டுகளுக்கு எங்களின் இதயத்திலிருந்து நன்றிகள். மேலும் இளமைத் துடிப்போடும், புதிய தெளிந்த சிந்தனைகளோடும் இணைச் செயலாளராக பணியாற்ற வந்துள்ள அருள்தந்தை. A.அருள்பிரகாசம் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.

- அருள்தந்தை அல்போன்ஸ்
மற்றும் ஆசிரியர் குழுமம்