மண்ணுக்கு வந்த விண்ணகம் (கிறிஸ்துமஸ் செய்தி)


மனிதம் புனிதம் பெற்ற இம்மாபெரும் பெருநாளில் விண்வாழும் இறைவன் மண்ணை நோக்கி வந்திட்டார் என்ற கற்கண்டு செய்தி நம் உடம்புகளையயல்லாம் பூரிக்க வைக்கின்றது. நாளும் நாம் தேடும் இறைவன் இதோ நமது நடுவில்! காணட்டும் நமது கண்கள் இமைகள் மூடாமல்! சிறு “பட்டம்” பெற்றுவிட்டால் கால்கள் நடவாமல் மேல் நோக்கியே வாழும் நம் மனிதர்களில் மாற்றுச் சிந்தனையை “ஆன்மீகமாய்” நம் மனங்களில் நிலைநிறுத்த நம் பெருமான் இயேசு தன் நிலையில் இருந்து கீழிறங்கி ஏழையின் கோலம் பூண்டு அடிமையின் ஒரு உருவமாய் ஆளில்லா ஒரு மகனாய் நம்மில் ஒருவராகத் தம்மை இனம் கண்டு கொண்டார். ஆம் சகோதரமே கிறிஸ்துமஸ் விழா அன்பின் தன்மையை கரிசனையின் நற்கருத்தை உலகிற்குப் பறை சாற்றும் ஒரு அன்பு விழா. ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனை மலையிலும், வானத்திலும், மேகத்திலும், இயற்கை முழக்கத்திலும் இருப்பதாக எண்ணிய மக்கள் இன்று கண் கொள்ளாக் காட்சியாக மக்களுக்குச் சாட்சியாக மண்ணில் பிறந்திட்ட இயேசுவை முகமுகமாய் தரிசனை செய்யும் உண்மை நிலை ஒரு உன்னத நிலையே!

இயேசுவின் பிறப்பு நம்மையயல்லாம் ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் “அன்பின் திரு நிகழ்வு”. இந்நிகழ்வின் நிலையை சற்று நோக்குவோமானால் கருணை இயேசுவின் தாயுள்ள பாசம் நன்கு புலப்படும். ஆம் சகோதரமே ! இயேசுவின் பிறப்பு நேரம் நட்ட நடு இரவு சாமம். மக்களும் மாக்களும் அனைத்தும் கண்ணயரும் நேரம் நமக்கு சிறிதளவும் சங்கடங்கள் ஏற்படுத்தாமல் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உத்தம தேவன் மாட்டடையும் தீவணத் தொட்டிலில் பிறந்தார் என்றால் நம்மை எத்தகைய அளவிற்கு மரியாதை செய்து மாண்பை கொடுத்திருக்கின்றார் என்பதை திட்டவட்டமாக நன்கு புலப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு நிகழ்விலே நாம் கற்றுக்கொண்ட பாடமாக, பிறரை மதித்து ‘பிறர் வளர; தான் குறுக’ என்ற தாரக மந்திரத்தை ஏற்று வாழ முன்வருவோம். ஒவ்வொரு மனிதனும் மனுசியும் இறைசாயலே என்பதைப் புரிந்து கொண்டு இயேசுவின் பாணியிலே அன்பு வாழ்க்கை வாழ்ந்து நமக்குள் இருக்கும் இழிநிலையை வேரறுப்போம். அன்புக்கு புது வடிவம் கொடுப்போம். அவ்வாறு வாழ்ந்தால்தான் நம் வாழ்வு இனிமையாகும். இல்லையேல் நம் வாழ்வு முற்றிலும்  “தனிமை” வாழ்வாகி காய்ந்த மரமாக பயனற்றுப் போகும்.

மேலும், இன்றைய விழா நமக்கெல்லாம் விடுக்கும் செய்தி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் இயற்கையை நேசிப்பதும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பிலே அன்பு விருந்தாளிகளாய் இருந்தவர்கள் ஆடு, மாடு, கழுதைகள் மற்றும் அங்கிருந்த இயற்கைச் சூழல்கள், மலைகள், குன்றுகள் இவையாவும் இயேசுவின் பிறப்பிலே அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. இயேசுவின் மேல் நேசம், பாசம் கொண்ட நாம் நமது சுற்றுப்புறங்களைப் பாதுகாத்து இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம். ஆணும் பெண்ணும் இணைந்த மனித வாழ்வில் நமக்குள் இருக்கும் முரண்பாடுகள், வேறுபாடுகள் அத்தனையையும்களைய முற்படுவோம். ஏனென்றால் நம்முடைய வேறுப்பட்ட கலாச்சார சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட இறைமகன் இயேசு தம் பிறப்பினால் நம்மை தனது புனித நிலைக்கு உயர்த்தியுள்ளார். மனு உரு எடுத்தல் என்பது நம் அன்பு மக்களை பாவங்களில் இருந்து மீட்கின்றார் என்பதாகும். கடவுள் நம்மை அவர்தம் சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கு, தம் ஒரே மகனையே பெண்ணிடமிருந்து பிறக்கச்செய்கின்றார். கல்வாரிப்பலிக்கு முழுமையாய் கையளிக்கின்றார்.

கிறிஸ்துமஸ் விழா என்பது மனிதன் தான் இருக்கும் நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு அருளின் நிலையை அடைந்துள்ளான் என்பதாகும். இந்த உயரிய நிலையில் என்றும் வாழ்ந்திட நம்மை அழைக்கும் கிறிஸ்துமஸ் விழா  - மனிதர்களை புனிதர்களை நிலைக்கு உயர்த்திய உன்னத நாள்.

இந்நாளின் பொருளை உணர்ந்த நாம் நம் ஆயன் வழிநின்று தாயன்பை தந்து வாழ்வோம். பூமியில் புதல்வர், புதல்வியாய் புண்ணியம் சேர்ப்போம்! புறக்கணிக்கப்பட்ட பூபாலனாய் மண்ணில் உதித்த பாலன் இயேசுவின் புகழை நாளும் பாடுவோம். நல்ல வழியை பின்பற்றுவோம். கிறிஸ்துவின் ஆசீர் உங்கள் உள்ளங்கள் இல்லங்களில் தங்கி புத்தாண்டு புதுமையில் மனிதம் சிறக்க செயல்படுவோம்!

- A.அற்புதராஜ்
மகளிர் திட்ட பணியாளர்