கூட்டமைப்பாய் சேர்வோம்!

பாதிப்பே - வழிகாட்டல்

                பாதிப்புகளை உணர்தல்... உயர்தலால் நாம் அடைந்த பயன் ஆகியனவற்றை கண்டோம் சென்ற இதழிலே... இது மட்டுமல்ல தோழர்களே! தோழிகளே!! பாதிக்கும் முன் இருந்த நம் நிலைçயினை கூட நாம் காண வேண்டும்.
                பாதிக்கப்பட்டவர்களால் உதிர்க்கும் ஒரு சொல் கூட மகத்துவம்வாய்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு நெறிமுறைகள் கூட நம் புது வாழ்விற்கான வழிகாட்டுதலாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்குள் பலவற்றை நாம் கேட்டிருப்போம். ஏனோ தானோ மனநிலையில் உளறிக் கொண்டு எப்படி வாழக் கூடாதோ அப்படித் தான் வாழ்ந்து கொண்டிருப்பர்.
                நமது வழிகாட்டிகளும், முன்னோர்களும் சமூகத்தில் சுமூக உறவுஇருக்க வேண்டும் என்றும்; வளர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இருந்தும்... நாம் உறவாக கூட மறுத்தால் ஏதோ நமக்குள் ஏற்றத் தாழ்வுகள்உண்டு என்று தான் அர்த்தம் கொள்ள முடியும். ஏனென்றால் நாம்... நமக்குள்... ஆண்டாண்டு காலமாய் வளர்த்த நல் உறவு கூட காணாமல் போய் விட்டதே...! நாம் கூடாவிட்டால்... நாம் வாழ கூட வைப்பவர் யார்? தான் தோழர்களே! தோழிகளே! ... உணருங்கள்...! உங்களால் முடியும்! உணர்த்துங்களேன்...! இனியும் உண்ண மறுக்காதீர் கூட்டமைப்பை...

தடையும் சாதிக்கும் வெறியும்

தோழர்களே! ... தோழிகளே!
                ஒன்று சேர தடைகள் உண்டு. அதனை தகர்த்தெறிய திறன்களையும் நாம் அறிவோம். தடைகள் வந்தால்தான் சாதிக்கும் வெறி நம்மிடம் பிறக்கும். தென்னாப்பிரிக்க சம்பவம் காந்திக்கு ஒரு தடை... அவமானப் பேச்சுக்களும், தரித்திர வாழ்க்கையும் உலகிற்கு ஒளியை தந்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு தடை ... குருகுலக் கல்வி முறை டாக்டர் அம்பேத்காருக்கு ஒரு தடை... இதுபோன்ற தடைகள்தான் அவர்களையும் சாதிக்கத் தூண்டியது. இதே போன்றுதான் நமக்கு ஏற்படுகின்ற தடைகளையும் நாம் தாண்டிவிட்டால் தன்னம்பிக்கை நமக்குள் பிறக்கும். ஓர் ஓட்டப் பந்தய வீரன் தடை தாண்டும் போட்டியில் வெற்றி என்ற இலக்கை அடைந்துவிட்டால்... மகிழ்ச்சிக்கு அளவில்லை... அதைவிட அவன் அடையப் போகும் பயன்களுக்கும் அளவில்லை. இதை போன்றுதான் தோழர்களே! தோழிகளே! ... நாம் தடைகளை கடந்து கூட்டமைப்பாய் சேர்ந்து விட்டால்... நாம்; நமது சமுதாயம்; நமது எதிர்கால சந்ததியினர் அடையப் போகும் பயன்களுக்கும் அளவில்லை.

ஜனசக்தி
ஆம் தோழர்களே! தோழிகளே!
                தனி ஆளாய் நாம் இருந்தால் எதனையும் வெற்றிக் கொள்வது கடினம். கூடினால் நம்மில் ஜனசக்திஎன்ற மக்கள் சக்தி உருவாகும். நமது சமுதாயத்தின் பெரும் பலமே மக்கள் சக்திதான். அந்த மக்கள் சக்தியினால் நாம் அடைந்தது தானே நமது இந்திய திருநாட்டின் சுதந்திரம். இன்று கூட... அந்த சுதந்திர நாளில் சுதந்திரமாக செல்ல இயலவில்லை. எந்த இரயில் தண்டவாளத்தில்... எந்த இரயிலில் ... எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற வெட்கக் கேடான சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! மக்கள் சக்தியினால் வாங்கப்பட்ட சுதந்திரம் மக்கள் சக்தியினால் காக்கப்பட வேண்டிய சூழலே உள்ளது. அந்த மக்கள் சக்தியினை உருவாக்க நாம் தடுமாறுவது ஏன்? இதனால் இவற்றினை காக்க மக்கள் சக்தி தேவை. உரிமைகளை பெறவும்; காக்கவும்; கடமைகளை செய்யவும் கேட்கவும்; நமக்குள் மக்கள் சக்தி தேவை. அந்த மக்கள் சக்தி கூட்டமைப்பு உருவாகும்போதுதான் கிடைக்கும்.

தலைமைத்துவம்

                இதுபோன்ற மக்கள் சக்தியினை ஒருங்கிணைத்து வழிநடத்த நல்ல தலைமைநமக்கு தேவை. தலைமை இல்லையயன்றால் செல்லும் பாதை மாறும்... தடம் மாறும். தடுமாற்றம் உருவாகும். பலர் தடம் மாறி; தலைமை மாறி பயணித்த வரலாறும் நாம் அறிவோம்... பல அமைப்புகள் காணாமல் போய்விட்டதையும் நாம் அறிவோம். இன்னும் ஏன்? நம் குழுக்களில் கூட நல்ல தலைமை; வழிகாட்டுதல் இல்லாததால் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டதையும் நாம் அறிவோம். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! எனவே நாம் கூட்டுணர்வு அடிப்படையில் செயல்படும்போதும் நல்ல தலைமைத்துவ பண்புகள் நம்மில் வளரும்... தலைமைத்துவம் வளரும்போது எந்த செயலை செய்யும்போதும் அல்லது ஈடுபடும்போதும் பொறுப்பு ஏற்கும்தன்மை வளரும். இதன் மூலம் நமது செயல் வெற்றி பெறும்போது நமக்கான ஒரு அங்கீகாரம்நாம் பெறுவோம். அந்த அங்கீகாரமே நமது வாழ்வின் வளமாக... நமது வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக அமையும்.
                நான்கு பேர் மதித்த நம்மை ... நாற்பது குழு மக்களும் மதிப்பர்... நான்கு கிராமத் தலைவர்களும் மதிப்பர்... நமக்குள்... நம் மனதில் ஏற்பட்ட தெளிவை கண்டு அசாத்தியமான துணிச்சல் பிறக்கும்... இதன் விளைவாய் நமது பேச்சில்கூட தெளிவு பிறக்கும். நாம் யாரிடமும் பேச கூச்சப்பட மாட்டோம். தவறுகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க அஞ்சமாட்டோம். எண்ணிப் பாருங்கள் தோழர்களே! தோழிகளே! 1999-க்கு முன்பு நாம் எத்துனை பேரிடம் பேசியிருப்போம். இன்றோ... 20 பேர் 30 பேர் கூடியிருக்கின்ற அவையிலே கூட பேசத் துணிந்து விட்டோம். இது நல்ல மாற்றம் தானே...? இதுபோன்ற மாற்றம் தொடர வேண்டும். இது நமக்குள் நல்ல தலைமைப் பண்பு வளர்ந்து விட்டதை தானே காட்டுகிறது. எனவேதான் கூறுகின்றோம் இன்று நாற்பது பேருக்கு தலைவனாய் தலைவியாய் இருக்கின்ற நாம் நாளை ஆயிரமாயிரம் பேருக்கும் தலைவனாய்; தலைவியாய் பரிணாமம் எடுக்க முடியும். எத்தனை நாள்தான் பிறர் தலைமையின் கீழ் செயல்படப் போகிறோம். நாம் தலைவர்களாய் மாறி வழிகாட்ட தயாராக கூடாதா? வழிகாட்டியாய் இன்று நமக்கு இருப்பவர்கள் நாளையே நம்மை கைவிட்டுவிட்டால் நாம் என்ன செய்யப் போகின்றோம்? எண்ணிப் பாருங்கள். புதிய கலாச்சாரம் படைப்போம்!

                “பிரச்சனைக்கு தீர்வு போராட்டம் தான்” - இது பொது நல அமைப்புகளின் சித்தாந்தமாக உள்ளது. நான்கு பேர் கூடி நாம் சாதிக்கும்போது நமக்குள் ஒரு ஆவல்... அல்லது மேலும் பல செயல்களுக்காக போராட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். இதுபோன்ற போராட்ட உணர்வு உம்மில் கூட்டமைப்பாய் உருவாகி விட்டால் எளிதில் கிடைக்கும். சமதர்ம உணர்வும் உம்மிடம் மேலோங்கும்.
                ஆண், பெண் பாகுபாடும் அறவே நீங்கும். ஜாதி, மத பாகுபாடும், ஏழை பணக்காரன் வித்தியாசமும் எளிதில் மறையும். ஏழைகளாய் நாம் பிறந்து விட்டதால் எகத்தாளம் ஆகும். அதிகார கூட்டத்திற்கு ஆணியடிக்கும் அதிகார கூட்டமாக நாமும் மாறலாம். நமக்கு வேண்டியதை நாமே முடிவு செய்யும் தீர்மான சக்தியாக நாம் உருவெடுக்க முடியும். சாஸ்திர சம்பிரதாயங்கள் அடக்கப்பட்டு நமக்கென்று உள்ள புதிய கலாச்சார பண்பாடுகளை வளர்த்தெடுக்க முடியும்.

உண்மை - கூட்டமைப்பு

ஆம் தோழர்களே! தோழிகளே!
                நாம் மட்டும் கூட்டமைப்பாய்பலமாய் மாறிவிட்டால் மக்கள் சக்தியினை திரட்டி நல்ல தலைவர்களாய் நாம் உருவாகி, நமது பிரச்சினை மற்றும் தேவைகளுக்காக போராடி நம் வாழ்வில் வளம் காண முடியும். இன்றைய சமூக அமைப்பை உணருங்கள். அதில் நம் நிலையினை காணுங்கள். அந்த சமூக அமைப்புக்கு மாற்றாய் நமது கூட்டமைப்பை மாற்றுங்கள். மாறும் நம் நிலை... மாறட்டும்...அடிமையாய்; அதிகார கைப்பிடிக்குள் வாழத்தான் நம் உத்தேசமா? இதைவிடுத்து உரிமைக்கு குரல் கொடுக்க... உண்மையினை நாம் வெளிப்படுத்த நம் திறமைஎன்னும் கூட்டமைப்பானஆயுதத்தை கையிலெடுங்கள். நம்மோடு நமக்காய்; நலிந்தவர்க்காய் குரல் கொடுக்க நல்ல இதயங்கள் தயாராக உள்ளது. உண்மையாய் வாழ நாம் முற்படுவோம். அந்த உண்மைகூட நம் கூட்டமைப்பாய் இருக்கட்டும் சரி தோழர்களே! தோழிகளே!!
                பயனைப் பார்த்தோம்... மற்றவையும் உண்டு... மற்றதை பார்க்க மற்றுமொரு இதழை புரட்டுங்கள்...
(தொடரும்...

                எஸ்.அசோக்குமார்
                ஒருங்கிணைப்பாளர், ஜெயங்கொண்டம்.