பொங்கல்

மூடுபனி விலக்கி  மொய்த்த குளிர்விலக்கி
நாடு நினைத்ததெலாம் நன்கு தொழிற்படுத்தி
தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெயில் தூவுகின்றான்
வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவோமே!           - பாரதிதாசன்.

போகிப் பொங்கல் :-  பழையன கழிதலும், புதியன புகுதலும்
அன்று : வீடு மற்றும் வீதியையும் சுத்தம் செய்து களஞ்சியத்தில் புதிய நெல்லைச் சேர்க்க பழைய நெல்லை எடுத்துவிட்டு சுத்தம் செய்வர். மார்கழியோடு துயரங்களும் கழியும் என்று தை மகளை வரவேற்க தயார் செய்வர். இன்று : வீட்டுக் கழிவுகளோடு பிளாஸ்டிக் மற்றும் டயர்களை முயன்று சேகரித்து நண்பர்களையயல்லாம் ஒன்றுகூடி கொளுத்தி மகிழ்வது. விளைவு : சுற்றுச்சூழல் சீர்கேடு, சுவாச நோய்கள்.

தைப் பொங்கல் :-
உழவே தலை என்றுணர்ந்த பண்டைத் தமிழர் தைத் திங்கள் முதல் நாளை உழவர் தினமாகக் கொண்டாடினர். விளைச்சலைத் தந்த பூமித்தாயையும், ஆதாரமாக விளங்கிய நீரையும், வானின்று வளம் பெருக்கிய கதிரவனையும் நன்றியோடு வணங்கி மகிழும் நாள் பொங்கல் திருநாள்.

அன்று :
உலகு நலன்காண உழவன் விதைத்து
கதிரடித்து செந்நெல் களம் சேர்த்து
ஊர்கூடி ஓரிடத்தில்  உரல் சேர்த்து
உலக்கைப் பாடலோடு உயர்நெல்லைத் தீட்டி
கோலமிட்ட வாசலில் புதுப்பானை வைத்து
பாலோடு புத்தரிசி ஏலம் வெல்லம்
நெய்யிட்டு பொங்கல் சமைத்து
பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு ஆர்ப்பரித்து
மஞ்சள், இஞ்சி, கரும்புடன் அமிழ்தன்னை பொங்கல் வைத்து
என்றும் இளமை மாறா இளம்பரியைப் போற்றி வணங்கினர்
உறவோடு விருந்துண்டு உளமகிழும்
உவகைத் திருநாள் தைத்திருநாள்.

இன்று :
வாசற் பொங்கலெல்லாம்
வரலாற்றுப் பாடமாச்சி
முற்றத்துப் பொங்கலுக்கும்
முற்றுப்புள்ளி வச்சாச்சி - எங்கள் நகரிலே குக்கரிலே பொங்கலாச்சி
குலவை சத்தம் மாறிப்போச்சி
விசில் சத்தம் வந்தாச்சி
வீடெங்கும் (பொங்கல்) மணமாச்சி
வீட்டிலுள்ள நாம் மட்டும்
விருந்துண்ணும் நிலையாச்சி.

மாட்டுப் பொங்கல் :-
கழனி அமைப்பது முதல் களம் நிறைப்பது வரை உறுதுணையாய் விளங்கிவரும் மாடுகளுக்கெல்லாம் மாச்சிறப்பு செய்யும் நாள் மாட்டுப் பொங்கல்.
மங்கா மகிழ்ச்சியோடு மாடு கன்று கழுவி
கொம்பு சீவி, வண்ணம் தீட்டி
மாலையிட்டு பொங்கல் ஊட்டி
வீதிவரை விரட்டி ஓட்டி
மாக்களோடு மக்களுமாய்
மகிழ்ந்து கொண்டாடி
செய்நன்றி மறவாத தமிழர்தம் பண்பை
தெரிவிக்கும் திருநாள் மாட்டுப் பொங்கல்.

கன்னிப் பொங்கல் :-
அறம் பொருள் இன்பத்தோடு வீரத்தின்
விளைநிலமும் தமிழர்தம் திருநிலமே
என்றுணர்ந்த நாள் இந்நாள்
(மறவர்) திறம் வளர்த்திடும் திருநாள்
இதை  கணூப் பொங்கல், காணும் பொங்கல் என்றும் தற்போது அழைக்கின்றனர். திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
பகையோடு புகையையும் நீக்கி
புதிய போகி படைத்திடுவோம்
இடையில் வந்த முறையை மாற்றி
இயற்கையோடு வாழ்ந்திடுவோம்
இனிய பொங்கல் படைத்திடுவோம்
இன்பத் திருநாள் வாழ்த்துக்கள்.
- ஜெ.ஜெகந்நாதன்