எல்லோரும் ஓர் குலம்

முன்னுரை :
இந்திய நாடு பரந்து விரிந்த பெரியநாடு. இங்கே பல இனத்தவர், மதத்தவர் வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் மேலாக பல ஜாதிகள் நிறம்பித் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு செய்து கொண்டிருக்கின்றன. இந்த வேற்றுமைகள் மறைந்து மக்களினம் ஒன்றுதான் என்ற மனநிலை எப்போது இந்திய மக்களின் உள்ளத்தில் வேரூன்றுகிறதோ அப்போது தான் எல்லோரும் ஓர் குலம் என்று கூற முடியும்.
சமய வேறுபாடு :
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர் என பல சமயத்தவர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. இந்து மக்கள் முஸ்லீம் மக்களையும், கிறிஸ்துவ மக்களையும் தாக்குகிறார்கள்.
எந்த மதத்தினர் எந்தக் கடவுளை வழிபட்டாலும் அது அவர்கள் உரிமை என்ற மனப்பான்மை ஏற்பட்டு, அவர்களும் மனிதர்கள் தான் என்ற மனிதநேயம் எப்போது மலர்கிறதோ அப்போது எல்லோரும் ஓர் குலம் என்ற சமன்பாடு நிலவும்.
ஜாதி வேற்றுமை :
மத வேறுபாட்டைவிடச் சாதி வேற்றுமை இன்று நாட்டில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்து மதம் என்ற ஒரு அமைப்பு அதற்குள் பல ஜாதி அமைப்பு போன்றவை இந்தியாவை வாட்டிக் கொண்டிருக்கிறது.
தீண்டத் தகாதவர்கள் என்ற ஒரு பிரிவினர் செய்யும் தொழில் அடிப்படையில் பிளவுப்பட்ட ஜாதி, ஜாதி சங்கம் என்ற பெயரில் மக்களை வேறுபடுத்தி கொண்டிருக்கிறது.
ஜாதி சங்கங்களையும் ஜாதி அடிப்படையில் நடந்து வரும் அரசியல் கட்சிகளையும் சட்டத்தால் தடை செய்ய வேண்டும். ஜாதி அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுப்பதிலும் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் சமநிலை ஏற்பட்டால் ஜாதிகள் தாமாகவே மறைந்து விடும்.
இன வேற்றுமை :
மாநிலங்கள் வாரியாக வாழும் மக்கள் இன வேற்றுமையிலும் கட்டுண்டு கிடக்கின்றனர். தமிழன் மலையாளியை மதிப்பதில்லை; மலையாளி மற்ற மாநிலத்துக்காரர்களை மதிப்பதில்லை; சில மாநிலங்கள் தனி நாடு போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே தீவிரவாதம் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒருமைப்பட்டு வளர, தேசிய ஒருமைப்பாடு ஏற்பட, இனவேற்றுமை களையப்பட வேண்டும். இன வேற்றுமை களைய மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டும் எல்லோரும் மனிதர்களே என்ற பக்குவம் ஏற்பட்டால் ஜாதி, இனம், மதம் அனைத்தும் மறந்து போகும்.
“இமயச் சாரலில் ஒருவன் இறுமினால்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்”
என்று பாரதிதாசன் கூறியது போல மனித நேயம் வளர வேண்டும். பாகிஸ்தான் குழந்தைக்கு இந்திய மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தனர் இதுதான் மனித நேயம். குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இப்போது சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உலக முழுவதும் இருந்து உதவிகள் வந்தது. இதுதான் மனிதநேயம். ஆனால் மத அமைப்புகளும், ஜாதி அமைப்புகளும் அதை தடை செய்கிறார்கள்.
முடிவுரை :
வருங்காலப் பாரதத்தைக் கட்டிக்காக்க வேண்டியவர்கள் இன்றைய மாணவர்களாகிய நாம் வருங்காலத்தில்
எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்; எல்லோரும் இந்திய மக்கள்.
என்ற பாரதியின் கருத்தை நிலைநாட்ட ஜாதி, மதங்களைக் களைந்து ஒருமைப்பாடு ஏற்படப் பாடுபடுவோமாக.