சிறப்பு பொருளாதார மண்டலம் - ஆய்வுக் கண்ணோட்டம் - சார்பு நிலையா?

1947 - ஆகஸ்டு மாதம் சுதந்திரம் பெற்றோம். 60 ஆண்டுகள் ஓடோடி விட்டது. நமது கவிஞர்கள் பலர் பாடினர். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... என்று...? உண்மையாக இருக்கலாம். ஆனால் தனி மனிதனே ஒருவரையயாருவர் சார்ந்திருக்க வேண்டும். இதுதான் நியதி... மனிதன் இவ்வுலகில் பிறக்கும்போதே தன் தாயை சார்கின்றான்; தந்தையை சார்கின்றான். தான் வாழ்கின்ற பூமியையும், அதனால் கிடைக்கின்ற பயன்களையும் சார்கின்றான். தனி மனிதனுக்கே சார்பு வாழ்க்கையயன்றால் 108 கோடி மக்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய திருநாட்டிற்கும் சார்பு என்பது தானாகவே வந்துவிடும்தானே... அதனால்தான் பிறரை (உலக நாடுகளை) சார்ந்து இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.... சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் புதிய திட்டம் என எண்ணத் தோன்றுகிறது. நல்லதாக இருக்கலாம்... நம்மை கெடுப்பதாக கூட இருக்கலாம். அவற்றினை ஆய்வு செய்த பின்பே அதைப் பற்றிய முடிவுக்கு வரமுடியும். அதை ஆய்வு செய்வதே இக் கட்டுரையில் முழுமுதற் நோக்கம்... வரவேற்பதும், வாரித் தூற்றுவதும்  உங்கள் கையில்தான் பெரும் மதிப்பிற்குரிய பாரத பெருமக்களே...! இனி இம் மண்டலத்தின்... (பொருளாதார) பிண்ணனியைக் காண்போம்.

திட்ட அளவு :
சிறப்பு பொருளாதார மண்டலம் இந்திய அளவில் 267 இடங்களில் அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. நமது தமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை, நெல்லை, நெய்வேலி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், ஈரோடு, ஓசூர், செய்யாறு, கன்னியாகுமரி நாங்குநேரி உள்ளிட்ட 47 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய உள்ளது.
பாரம்பரியம் அமுப்பு :
ஏற்கனவே விவசாயம் பசுமைப் புரட்சியின் மூலம் அழிக்கப்பட்டு ஏகாதிபத்தியத்தின் நுழைவு மூலம் அழிக்கப்பட்டு விதைகள் அழிக்கப்பட்டு, செயற்கை உரங்கள் திணிக்கப்பட்டு, விளை நிலங்களை உவர் நிலங்களாக மாற்றி சீரழிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு இடியாய் வந்துள்ளதுதான் சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் இத்திட்டம். போதிய விலையின்மை இல்லாமையால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை மேலும் காணமல் போகச் செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் இச் சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம்.

அப்படி! இச் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் கூறுவது தான் என்ன? இதோ...

1. அந்நிய தொழிற் குழுமங்களுக்கு ஆயிரம் ஏக்கர் முதல் 45 ஆயிரம் ஏக்கர் வரை அடி மாட்டு விலைக்கு விற்பது. இதனையும் அரசே ஏற்பாடு செய்து தருவது.

2. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி கிடையாது.

3. இம்மண்டலத்திற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்ய அரசு அனுமதி தேவை இல்லை.

4. சிறுதொழில் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

5. மண்டலத்திற்கு தேவையான அந்நிய மூலதனத்தை அரசின் அனுமதியின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கான லாபத்தின் மீது வரி செலுத்த தேவையில்லை.

6. இச் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியனவற்றை இலவசமாக அமைத்து தர வேண்டும்.

7. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிற் சங்க உரிமை, தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழில் தகராறு சட்டங்கள் செல்லுபடியாகாது.

8. ஏகாதிபத்தியங்களின் புதுக் காலனியாக்கத்தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், வாங்கப்படும் இடத்தில் 25 சதவீத இடத்தில் தொழிற்சாலையும், 75 சதவீத இடத்தில் கேளிக்கை விடுதி குடியிருப்புகள் கட்ட உரிமை செய்யவும் தாராள உரிமை உண்டு.

முந்தைய லட்சனம் - லாபதாரர்கள் யார்?
இத்திட்டத்தின் லாபதாரர்கள் யார் யார் தெரியுமா? ரிலையன்ஸ், டாடா, மகேந்திரா, இந்துஸ்தான் மற்றும் சகாரா போன்றோர்தான். தயவு செய்து எண்ணிப் பாருங்கள்... கலர் பனியன் உற்பத்தி என்று கூறி திருப்பூர் நகரம் நாசமானது போதாதா? தோல் பொருள் உற்பத்தி என்று கூறி வேலூர், திண்டுக்கல், திருச்சி ஆகிய நகரங்களின் நிலை தெரியாதா? இன்னும் ஏன் இறால் மீன் வளர்ப்பு என்று சொல்லி கடற்கரையோர நிலம் நாசமாக்கப்பட்டது போதாதா? இப்போது கோரப்பிடியில் நிற்கும் விவசாயிகள்... விவசாயத் தொழிலாளர்களை தாக்க இத் திட்டமா?

அரசு கூறுவது என்ன?
விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத் திட்டத்தை கொண்டு வரலாம் என்ற கருத்து கூட தற்போது முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதுகூட மறைமுகமாக தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற மறுப்பதுதான். மேலும், நீர் ஆதாரங்களை தக்க வைத்திருப்பவை தரிசு நிலங்களே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் இத்திட்டத்தால்தான் என்றும் கூறப்படுகிறது. ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்களை பரித்து, விவசாயத் தொழிலாளர்களின் வேலை பரிக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சில பேருக்கு தான் இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பு என்பதுதான் உண்மையிலும் உண்மை. எனவே ஆயிரமாயிரம் விவசாய கூலித் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு சில ஆயிரம் பேருக்கு வேலை தருவதுதான் இத்திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் முதலாளித்துவத்தின் தரகு முதலாளி வளர்க்கப்பட்டு, உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு அழைத்து செல்லப்படுவர். ஏனென்றால் அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு, அவற்றோடு நமது சிறுதொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும்.

இவ்வளவு பாதிப்புகள் உள்ளடக்கி கொண்டு வரப்படும் இத் திட்டம் நமக்குத் தேவையா? ‘உலகமயமாக்கல்’ என்ற போர்வையில் நாம் ஏகாதிபத்தியங்களை சார்ந்திருக்க வேண்டுமா? சிந்தியுங்கள்...

ஆர்ப்பரிப்போம்!
இவற்றிற்கு மாற்றாய் நாம் செய்ய வேண்டியது என்ன?

1. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழில் துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்பந்திக்க வேண்டும்.

2. நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
- ‘அம்மு