கூட்டமைப்பாய் சேர்வோம்!

தோழர்களே! தோழிகளே!

கடந்த இரண்டு இதழ்களில் கூட்டமைப்பு நம்மிடம் எப்படி உருவாகின்றது? அதற்கு தடையாக உள்ளவை எவை? கூட்டமைப்பாக மாறினால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன? என்பதனை கண்டோம்...

இவ்விதழில் நமக்கு முன்னோடியான சில இயக்க பண்புகளை காண்போம். இயக்கம் என்றாலே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதாகும். நாம் தொடர்ந்து இயங்கி செயல்பட்டால்தான் பாதிப்புகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் அல்லது நமக்கான பயன்களை நாம் பெற இயலும்.

நாமும் ஒரு இயக்கமாக மாறி... அல்லது கூட்டமைப்பாக மாறி செயல்பட நல்ல இலக்கு அல்லது குறிக்கோள் காண வேண்டும். நமது கூட்டமைப்பு எதை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவு வேண்டும். அந்த தெளிவு தான் குறிக்கோளாகும். இலக்கு இல்லாத பயணம் நடு ஆற்றில் துடுப்பு இல்லாமல் பயணிக்கும் படகு போன்றது.

இன்று நாம் ஒரு அமைப்பாக கட்டப்பட்டு விட்டோம். ஆனால் இந்த அமைப்பு எதற்காக என்று எண்ணிப் பார்த்தோமா? நாலுபேர் சேர்கிறார்கள்... வருகிறார்கள் நாமும் தான் சென்று வருவோமே... என்ற எண்ணத்தில் வருகின்றோமா? அல்லது நாலுபேர் என்ற தெளிவான சக்தியோடு நாமும் ஒரு சக்தியாக சேர்ந்து சாதிக்கப் போகின்றோமா? அந்த சாதிப்பு செய்வதற்காக நாம் நமக்குள் ஒரு குறிக்கோளை அல்லது இலக்கை உருவாக்கி இருக்கின்றோமா? "பாரத நாட்டிற்கு சுதந்திரமே" என்ற குறிக்கோளோடு உருவாக்கப்பட்டது காங்கிரஸ் பேரியக்கம். அந்த இயக்கத்திற்கு தெளிவான குறிக்கோள் இருந்ததினால்தான் தியாக சிந்தனையுள்ள; அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட உறுப்பினர்கள் இருந்தனர். அதுவே அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக போராட்ட உணர்வை வளர்த்தது. பல இழப்புகளுக்கு பிறகு நாம் சுதந்திரம் பெற முடிந்தது. எனவேதான் 'குறிக்கோள்' ஒன்றை நாம் உருவாக்குவதன் மூலம் தான் நமது செயல்கள் இருக்கும் என்பதை உணருங்கள்.

ஆம் தோழர்களே! தோழிகளே!... இன்று நாம் உருவாக்கியிருக்கின்ற பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு ஒரு தெளிவான பாதை என்ற குறிக்கோளை உருவாக்குங்கள். இந்த குறிக்கோள் நமக்கு நல்ல வழிகாட்டும்... நமது செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்... இந்த இலக்கு நமது பிரச்சினைகளை களையக் கூடிய சமுதாய புரட்சியை உள்ளடக்கியதாக இருக்கட்டும். ஆம் தோழர்களே! தோழிகளே!...

சுரண்டல், பெண்ணடிமை, ஆதிக்க சக்திகளின் நடமாட்டம் போன்றவற்றை அழிக்கும் சமுதாய புரட்சியாக இருக்க வேண்டும்! இருக்கத்தான் வேண்டும்...

 'சமுதாய புரட்சி' என்பது மரங்களின் கிளைகளை போன்றதன்று; மாறாய் மரத்தின் ஆணி வேரையே ஆட்டி பிடுங்குவதுதான் என உணருங்கள்.

ஆதிக்க சக்திகள் இன்று அரசியல்வாதிகள் என்ற போர்வையிலே... மதவாதிகள் என்ற போர்வையிலே... ஜாதி என்ற அடையாளத்திலே... பாலினம் என்ற உருவத்திலே... இன்று உலா வருகிறது. உணருங்கள்... உயர்த்துங்கள் நம் சமுதாயத்தை... இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'புரட்சித் தீயாக' உங்களது அமைப்பின் இலக்கு அமைய வேண்டும். ஆதிக்க சக்திகள்தான் இன்று வளர்கிறார்கள். ஏனென்றால் சுரண்டி வளம் காணுவது தானே அவர்களின் இலக்கு...! அவர்களின் இலக்கிலே... தீமையாய் இருந்தாலும் வெற்றி பெறுகிறார்களே! அவர்களே... கயவர்களே வளம் பெறும்போது...! நல்லதற்காக... சமுதாய வாழ்விற்காக நாம் உருவாக்கும் இலக்கில் நாம் வெற்றி பெற முடியாதா? எனவேதான் தோழர்களே! தோழிகளே! இலக்கை உருவாக்குங்கள்... அதை நோக்கி செல்லுங்கள்... வளம் வரும் நம் வாழ்வில்... இயக்கம் என்பதே அர்ப்பணிப்பு தியாக மனப்பான்மையை உள்ளடக்கியது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பண்புகள் தான் இயக்க வளர்ச்சிக்கு உறுதுணை என்பதை மறவாதீர். நம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை என்ற காதல் வையுங்கள். அந்த காதல் அர்ப்பணிப்பு, நமது அமைப்பிற்கு என்று ஒரு விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். "நெஞ்சுப் பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்..." இவ்வரியை பாருங்கள்.

பாதிக்கப்பட்ட நமது நெஞ்சம் குமுற வேண்டும். குமுறல் தான் நல்ல செயல்களுக்கு விடிவாக இருக்கும். கண்ணகியின் குமுறல் மதுரையை எரித்ததா இல்லையா? அந்த குமுறல்தான் ஆக்ரோ­மாக மாறி போராடத் தூண்டும் என்பதை மறவாதீர். எனவேதான் தோழர்களே!... தோழிகளே! நமது சமுதாயத்தில் நிலவுகின்ற சுரண்டலை பாருங்கள்... சுரண்டிவிட்டு நெஞ்சு நிமிர் நடையினை பாருங்கள்... அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை பாருங்கள்... அவர்களின் ஆணவப் போக்கை பாருங்கள்... இத்துணையும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் தான் நாம் சுரண்டப்படுகின்றோம்; அதிகாரத்துக்குள் ஆட்பட்டு அல்லல்படுகிறோம். இதற்கு தீர்வு வேண்டாமா?

நேற்று நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ... அப்படித்தான் இன்றும் நாம் வாழ்கின்றோம்... ஆனால் அதிகார வர்க்கத்தினரோ... ஆண்டுக்கு ஆண்டு லட்சங்களையும் கோடிகளையும் ஈட்டி 'பதி'களாக காட்சி தருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்.

இவையயல்லாம் நம் கண்களுக்கு பிரச்சினையாக ஏன் தெரியவில்லை? இவற்றையயல்லாம் நாம் ஏன் உணர மறுக்கிறோம்?... எனவேதான் 'சமூக பிரச்சினை' ஒன்றை கையில் எடுங்கள். குழுவாக அமர்ந்து நமது பிரச்சினைகளை அலசுங்கள். அந்த அலசலின்போது சமூகத்தின் அவலங்கள்; அதில் நம் நிலை; அதனால் நாம் அடைந்த மோசடிகள் அல்லது தீமைகள் தெரியவரும். இதனால் நாம் பாதிக்கப்பட்டதும் அறிய முடியும்

இதன் மூலம் போராட முடியும். நம்மில் உள்ள ஜனசக்தி என்ற ஆயுதம் மூலம் போராட்ட களத்திற்கு வாருங்கள். ஜனசக்தி திரட்ட பொதுவுடமை கருத்துக் கொண்ட அமைப்புகளையும் அணுகினால் அவர்கள் உதவுவர். போராட்டம் வேகம் பெறும். புறக்கணித்தவர்கள் நம் கோரிக்கையை நிறைவேற்றுவர். நம் வாழ்வில் 'வளம்' காண வழி பிறக்கும் என்பதை மறவாதீர்.

பல இயக்கங்கள் இம் முறையை பின்பற்றிதான் நமது சமுதாயத்திற்கு நல்லதை செய்துள்ளனர் என்பதை மறவாதீர். அந்த இயக்கத்தில் ஒன்றாக நமது கூட்டமைப்பும் ஏன் மாறக் கூடாது? எண்ணுங்கள் தோழர்களே! தோழிகளே!...


புதிய சமுதாயம் படைக்க இயக்கமாக உள்ள நம் கூட்டமைப்பால் தான் முடியும். அந்த அமைப்பு அல்லது இயக்க சிந்தனையை அசைபோடுங்கள். அசைக்க முடியாத நம்மை எவரும்...! சார்ந்து வாழ்வதே வாழ்க்கை - நம்மை சார்ந்தவர்களுக்காக; நமக்காக போராட மறுப்பது ஏன்?

இயக்கங்களாக உருவாக்கம் பெறுவது சாதனைகள் செய்வதற்காகத் தான் என்பதை மறவாதீர்கள். அந்த சாதனை செய்யும் இயக்கமாக நமது கூட்டமைப்புகள் மாற வேண்டுமானால் நமது பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க கையில் எடுங்கள். எடுப்பீர்கள் நம்பிக்கை நமக்கும் உள்ளது.

அந்த நம்பிக்கை நம் மனதில் ஆழமாக இருக்கட்டும். அடுத்த இதழில் சந்திப்போம்...

எஸ்.அசோக்குமார் 
ஒருங்கிணைப்பாளர், 
ஜெயங்கொண்டம்.