பெண்களும், சட்டமும்

ஒரு மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களை கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்ட திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது.

ஏறத்தாழ 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்கள் குழுக்களாக வாழத் துவங்கினர். பல இலட்சம் ஆண்டுகளாக மந்தை மந்தையாக வாழ்ந்ததில் இருந்து மாறுபட்டு குழு வாழ்க்கை துவங்கியது. ஒருவழி வந்த உறவினர்கள் ஒரு குழுவாக வாழ்ந்தனர். ஒரே இடத்தில் வாழ்ந்தனர். ஆண்கள் வெளியே வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் சென்றனர். பெண்கள் உணவு வகைகள் தேடிக் கொண்டு வந்தனர். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்தனர். பெண்கள் சிறிது சிறிதாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். இவ்வாறு படிப் படியாக துவங்கப்பட்ட பெண் அடிமைத்தனம் நிலைக்க வேண்டாமா? இங்கேதான் சட்டம் உதவிக்கு வருகின்றது. இந்த பெண் அடிமைக் கலாச்சாரத்தைத் தக்க வைக்க ஆண்களால் இயற்றப்பட்ட மதக் கோட்பாடுகளும், சட்டங்களும் பெரிதும் உதவின. பகை நாட்டு பரி, கரி, தேர், படைக்கலம், ஆடை, குடை, தானியம், பசு, பெண் யாவும் வென்ற நாட்டவனுக்கு உரிமை உடையன என்று மனுநீதி கூறுகின்றது.

ஒரு ஆண் மகனுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டாள் என்று கிறிஸ்தவ மதம் வலியுறுத்துகிறது. இஸ்லாம் சமயம் வெறும் முகமூடித் துணிக்குள் பெண்களை சிறை செய்து வைத்திருக்கின்றது.

சட்டமும் கலாச்சாரமும் நெருங்கிய தொடர்புடையன ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட ஒரு பெண்ணடிமை கலாச்சாரம் தலைவிரித்தாடும் ஒரு சமுதாயத்தின் சட்டங்கள் பெண்களுக்கு பெரிதும் எதிராகவே அமைகின்றன.

பெண் சிசு கொலை : 
வெள்ளையர் ஆதிக்கத்தின் கீழ் நமது நாடு இருந்த காலத்தில் முதன் முதலாக "பெண் குழந்தைக் கொலை தடைச் சட்டம் - 1870 - ம் ஆண்டு" அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன.

கருகலைப்பு : 
1971-ம் ஆண்டு சட்டம் கீழ்க்கண்ட சில காரணங்களுக்கு மட்டுமே கருகலைப்பு செய்யலாம்.


  1. கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்போது. 
  2. பிறக்கும் குழந்தைக்கு உடல், மூளை போன்ற பாதிக்கப்படும்போது. 
  3. மருத்துவர் சரியயன்று எண்ணுகின்ற மற்ற காரணங்களுக்காகவோ கருச்சிதைவு செய்யலாம். 


 இந்திய தண்டனைச் சட்டம் - 1860

ஆபாசப் புத்தகம், விளக்கப் படம், ஓவியம், பொருள், விற்பது, உற்பத்தி செய்வது இவற்றை தடை செய்கின்றன.

பிரிவு - 292 - இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

பிரிவு - 292 - குறைந்த அளவு தண்டனை ஆறுமாதச் சிறைக் காவல் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேற்பட்டாமல் இருத்தல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

பிரிவு - 293 - 6 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
பிரிவு - 294 - 3 மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

1925-ம் ஆண்டு நமது அரசு ஆபாச விளம்பரங்களை தடை செய்து விரிவாக ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்தது.

பெண்ணை அவமதித்தல் : 
பிரிவு - 354 - ஒரு பெண்ணுடைய கண்ணியத்திற்குப் பாதிப்பு விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். தண்டனை - 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே.

கட்டாயத் திருமணம் : 
பிரிவு - 366 - ஒரு பெண்ணைப் பலாத்காரமாக அல்லது விருப்பத்துக்கு விரோதமாக திருமணம் செய்தல் அல்லது கடத்தி செல்வது குற்றமாகும். தண்டனை - 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும்.

பிரிவு - 366 ஏ - பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை பிறருடன் கட்டாய உடல் உறவிற்கு உட்படுத்துவது அல்லது உட்படுத்தப்படுவது குற்றம். தண்டனை - 10 ஆண்டுகள் சிறைக்காவல், அபராதம்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் : 
பிரிவு - 373 - பதினெட்டு வயது பூர்த்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்திற்கு அல்லது முறைகேடான உடலுறவு அல்லது வேறு சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த நபரை வாங்குவதும், வாடகைக்கு பெறுவதும், தன் வசம் கொண்டு வந்து வைத்திருப்பதும் குற்றம். தண்டனை : 10 ஆண்டுகள் சிறை காவல், அபராதமும். இந்தியாவில் கணக்கெடுத்துப் பார்த்தால் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களில் 20% குழந்தைகள்.

பலாத்காரம் : 
பலாத்காரம் என்றால் (1) அவளுடைய விருப்பத்திற்கு மாறாக (2) அவளுடைய சம்மதமின்றி (3) ஆணோ, பெண்ணோ, நெருக்கமான ஒருவருக்கு மரணம் (அல்லது) காயம், அச்சுறுத்தலின் பேரில் அவளுடைய சம்மதத்தை பெற்று (4) கணவன் இல்லையயன்று தெரிந்தபோதிலும் (5) சம்மதம் இருந்தும் அவள் 16 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் (6) புத்தி சுவாதீனம் இல்லாமல் குடிபோதையில் இருக்கும்போது.

பிரிவு 375 யை பயன்படுத்த வேண்டும்.

பிரிவு 376-ன் படி குறைந்தபட்சம் 7 வருடம் முதல் ஆயுள் சிறை தண்டனை அபராதமும்.

கீழே கொடுக்கப்பட்ட நபர்கள் :

(1) போலீஸ் அதிகாரி தன் எல்லைக்குள் பொறுப்பில் இருக்கும் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(2) சிறை, மருத்துவமனையில் உள்ள பெண்ணை அங்குள்ள ஆண் ஊழியர் பலாத்காரம் செய்தல்.
(3) பெண்கள், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் பணி செய்யும் அரசு அதிகாரி, தம் அதிகாரத்தை பயன்படுத்தி அங்குள்ள பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(4) கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்தல்.
(5) 12 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணைப் பலாத்காரம் செய்தல்.
(6) குழுவாக சேர்ந்து பலாத்காரம் செய்தல்.
இவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் முதல் ஆயுட்கால சிறை காவல் தண்டனை, அபராதமும்.


பிறர் மனை சேர்க்கை : 
பிறருடைய மனைவியுடன் அவளுடைய கணவன் அனுமதி இல்லாது அவருடன் உடலுறவு கொள்வது பிறர் மனை சேர்க்கை என்ற குற்றமாகும்.
பிரிவு 467-ன்படி 5 ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
இருதார மணம் :
இருதார மணம் என்றால் ஒரு கணவனோ, மனைவியோ முதல் திருமணம் சட்டப் பூர்வமானதாக உள்ளபோதே மறு திருமணம் செய்வது குற்றமாகும்.
பிரிவு 494-ன்படி 7 ஆண்டு சிறைக்காவல் தண்டனையும், அபராதமும்.
பிரிவு 498ஏ - இது 1983-ல் புகுத்தப்பட்ட பிரிவாகும்.
கணவர் (அல்லது) கணவரின் உறவினரால் கொடுமை குற்றமாகும். தண்டனை - 3 ஆண்டு சிறைக் காவல், அபராதம்.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் - பிரிவு 14 
இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர, அரசு மறுக்கக்கூடாது. பிரிவு-15 சமயம், சாதி, இனம், பால் பிறப்பிடம் அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும், எந்த குடி மகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது.

P.ஆலிஸ்மேரி, 
ஒருங்கிணைப்பாளர், திருவையாறு மண்டலம்.