பாலின நிகர்நிலை

பாலினம் என்றால் பெண்கள், பெண்கள் மேம்பாடு போன்றவற்றை மையப்படுத்துவது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பாலினம் என்பது ஆண்கள், பெண்கள் மத்திய சமூக, கலாச்சார வரையறையாகும். இது உழைப்பு, சந்தை, குடும்பம், அரசியல் கட்டமைப்பு போன்றவற்றில் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே வெளிப்படும் உறவு கட்டமைப்பின் வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு கருத்து கருவியாகும்.

பாலினம் என்ற கருத்தாக்கத்தை விவரிப்பு நிலை, பகுப்பாய்வு நிலை என்ற 2 மட்டங்களில் விவாதிக்கலாம்.

1. விவரிப்பு நிலை :
விவரிப்பு நிலை ஆணுக்கும், பெண்ணுக்குமிடையேயான பால் வேறுபாட்டை குறிப்பது. அத்துடன் சமூக வேறுபாடுகள், வர்க்கம், சாதி, இனம், மதம், வயது, தொழில் மட்டுமல்லாமல், கால மாறுதலால் ஏற்படும் மாறுபாடுகளை விவரிப்பதாகும். மேலும் பாலினம் என்ற கருத்தாக்கம் சமூக ரீதியாக வரையறுக்கப்பட்டதால் அதனை மாற்றியமைக்க முடியும்.

2. பகுப்பாய்வு நிலை (Analytical)
பாலின முறைமையினால் தாக்கம் பெறுகின்ற ஆண், பெண் அடையாளங்கள், அதிகாரங்கள், அதிகார உறவுகள், வளங்கள் அவற்றை கட்டுப்படுத்துதல், அதனால் பெறும் பலன்கள் ஆகியவற்றை இனங்காணவும் ஆய்வு செய்யவும் நமக்கு வழியேற்படுத்துகிற தத்துவ மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையே பகுப்பாய்வு நிலை. மேற்கூறிய 2 கோணங்களிலும் பாலினத்தை பார்க்க வேண்டும்.

உழைப்பின் பாலின பிரிவினை :
ஆணும், பெண்ணும் என்ன செய்ய தகுதி உடையவர்கள் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் நிலவும் சமூக கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுப்பட்ட பொறுப்பு, கடமைகளை பிரித்தளிப்பதையே உழைப்பின் பாலின பிரிவினை என்று சொல்லப்படுகின்றது. இது 3 வகையாக பிரிக்கப்படுகின்றது.

உற்பத்தி உழைப்பு : (Productive Work)
நுகர்வுக்கும், வியாபாரத்திற்குமான பண்டங்களையும் சேவைளையும் (விவசாயம், மீன் பிடித்தல், சொந்த தொழில்) உற்பத்தி செய்வதும், குறிப்பாக சம்பளம் அளிக்கப்படும் வேலை அல்லது வருமானத்தை உற்பத்தி செய்பவை உற்பத்தி உழைப்பில் அடங்கும். ஆணும், பெண்ணும் உற்பத்தி உழைப்பில் ஈடுபட்டாலும் பெரும்பான்மையான இடங்களில் அவர்களின் பாத்திரமும், பொறுப்பும் மாறுபட்டிருக்கும். பெண்களின் உற்பத்தி உழைப்பு ஆண்களின் உற்பத்தி உழைப்பை விட குறைவான அளவுக்கே புலப்படக்கூடியதாகவும் குறைவாக மதிப்பிடக் கூடியதாகவும் உள்ளன.

மறு உற்பத்தி உழைப்பு : (Reproductive Work)
மறு உற்பத்தி உழைப்பு என்பது 2 விதத்தில் பார்க்கப்படுகிறது. உடலியல் மறு உற்பத்தி (Biological Work) உழைப்பு என்பது குழந்தையை கருவில் சுமப்பது, பெற்றெடுத்து பாலூட்டுவது, வளர்ப்பது போன்றவற்றை குறிக்கும். மற்றும் சமூக மறு உற்பத்தி (Social reproductive) உழைப்பு என்பது உணவு தயாரிப்பு, தண்ணீர் பிடிப்பது, விறகு கொண்டுவருவது வேலைகள் மற்றும் பராமரிப்பு, குடும்ப ஆரோக்கியம் போன்ற குடும்ப வேலைகள் மற்றும் பராமரிப்பு அடங்கும். மனித குலத்தின் இருப்புக்கு மறு உற்பத்தி பணி மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் மறு உற்பத்தி உழைப்பு மிகுந்த உடல் உழைப்பு தேவைப்படுவதாகவும், அதிக நேரம் பிடிப்பதாகவும் இருந்த போதும் இது முக்கியமானதாக கருதப்படுவதில்லை. இது பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் பொறுப்பாகவே இருக்கிறது.

சமூக உழைப்பு (Community Work)
சமூக உழைப்பு என்பது திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், சமூக முன்னேற்ற செயல்பாடுகள் (ரோடு, மின்வசதி, பன்ளிக்கூடம், ரே­ன் கடை, சுகாதாரம்) குழுக்களிலும், அமைப்புகளிலும் பங்கெடுப்பது, உள்ளூர், அரசியல் செயல்பாடுகள் இன்னும் இது போன்ற சமூக நிகழ்வுகளை கூட்டாக செயல்படுத்துவதாகும். சமூகங்களை பற்றிய பொருளாதார ஆய்வில் இது போன்ற உழைப்பு ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூக செயல்பாட்டிற்கு தன்னார்வ உழைப்பு கணிசமாக செலவிடப்படுகிறது. அது சமூகத்தின் ஆன்மீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும், சுய நிர்ணயத்திற்கும் மிகவும் அவசியமாகும்.

மேற்கூறிய பாலின உழைப்பு பிரிவினையை கணக்கிட்டால் (24 மணி நேரத்தில் ஆண் செய்யும் வேலைகளையும், பெண் செய்யும் வேலைகளையும் பட்டியலிடுதல்) பெண்கள் செய்யும் வேலைகள் பெரிதாக கணக்கிடப்படாத நிலை விளங்கும். ஆணின் உழைப்பும், பெண்ணின் உழைப்பும் சமமாக மதிப்பிடப்படுவதில்லை. சமமாக பிரதிபலன் பெறுவதில்லை என்பதால் பாலின உழைப்பு பிரிவினை சமனற்ற நிலைக்கும், மேல் கீழ் அதிகார கட்டமைப்புக்கும் இட்டு செல்கிறது

தொகுப்பு :
S.மரியசகாயமேரி
CCO, கும்பகோணம்