சிறப்பு பொருளாதார மண்டலம்


தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்.

சித்தரிப்பு :
"இன்னொரு உலகம் சாத்தியம்" என்று போராடி வரும் வேளையில் உலகமயமும் அதன் இயல்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை 'புதியதோர் உலகமாக' சித்தரித்து கொண்டுள்ளது.

இந்த பொருளாதார மண்டலம் யாருடைய நலனுக்காக ? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது ? இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது ? என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உண்மையான சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்திய நிலை :
2005 நவம்பர் மாதம் மாண்புமிகு பாரத பிரதமரால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் ! இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுவது என்னவென்றால் "நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது ; அதற்கான சர்வதேச அளவில் மண்டலங்களை அமைப்பது" என கூறப்படுகிறது மேலும் "வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது" என ஆசையாயும் கூறுகின்றது.

இதற்காக நமது மத்திய அரசின் வர்த்தக துறை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் 128 நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்திய அளவில் 304 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் அரசு அசுர வேகத்தில் திட்டம் தீட்டியுள்ளது.

பங்குதாரர்கள் :
அரசினால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தினை அமைக்கப் போவது யார் ? வேறு யாருமல்ல நமது பங்காளிகள் ! ரிலையன்ஸ், டாடா, சஹாரா, யுனிடெக், வீடியோகான், மகிந்திரா, கல்யாணி குழுமம் போன்ற நிறுவனங்கள்தான் !
ஏரி நிறைந்தால் கரை கசியும்
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் முதல் 35 ஆயிரம் ஏக்கர் நிலம் வரை நிலம் கையகப்படுத்தலாம் என்ற செய்தியும் நம்மைப் போன்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளாய் அமைகின்றது. மும்பையில் ரிலையன்நிறுவனம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இம்மண்டலத்தை அமைத்துள்ளது. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என கூறப்படுகின்றது.

"இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியா பல லட்சம் கிராமங்களை உள்ளடக்கியது" என்றார் மகாத்மா காந்தி அவரது வழி வந்தவர்கள் அவரது சிந்தனைக்கு சமாதி கட்டிக் கொண்டு வருகின்றனர். நன்செய் நிலம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு நிலக்கொள்ளை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இம்மண்டலத்தினால் நகர நெருக்கடி ஏற்பட்டு சமூக பதட்டமும் உருவாகின்றது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இது பற்றி கூறும்போது, "மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்" என்றார்.

உணவு பற்றாக்குறை :
ஆம் ! இது வரை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 67 சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒரு லட்சத்து 34 ஆயிரம் யஹக்டேர் நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 74 ஆயிரம் யஹக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது இது தான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது.

இச்சிறப்பு பொருளாதார மண்டலம் ஆசீர்வதிக்கப்பட்ட நவீன காலனியாதிக்கமாக செயல்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்ய தாராளம் :

  • இம்மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. 
  • இப்பொருட்களுக்கு பூரண வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. 
  • முதல் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி விலக்கு உண்டு.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.
  • அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறு முதலீடு என்ற பெயரில் சலுகை நீடிப்பு செய்யப்படும்.
  • "ஏழை அழத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்"
  • இம்மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு எவ்வித வரியும் கிடையாது.

சட்ட விலக்கு :

பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உள்ளிட்ட 27 வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர் வேலை, காண்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும் எட்டு மணி நேர வேலை பாதுகாப்பு மருத்துவ பாதுகாப்பு என சட்ட ரீதியான எந்த பாதுகாப்பும் இம்மண்டலத்தில் செல்லுபடியாகாது.

அரசுக்கு இழப்பு :
அரசின் இச்சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையினால் அரசுக்கு
ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறையே அறிவித்துள்ளது. இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு இம்மண்டலத்தின் மூலம் எதிர்பார்க்கும் மூலதனம் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி மட்டுமே என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

வேலை ஏய்ப்பு :
வர்த்தகத்துறை இம்மண்டலத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என அறிவித்தது. ஆனால் 2006 வரை செயல்பட்டு வரும் 28 சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகக் குறைந்த 1 லட்சத்து 650 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கேரளா - கொச்சினில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 7 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.

தொழிற்பேட்டைகள் அம்போ :
அந்நிய முதலீடு என்ற பெயரில் இம்மண்டலம் ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. இதனால் மாநில அரசுகளால் ஆங்காங்கே துவக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை அரசு சட்டை செய்வதில்லை. தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளில் சாலை, மின்சார வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அம்பத்தூர் பேட்டையினை சீரமைத்தால் மட்டும் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 1 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கலாம். எனவே அரசு வேலை வாய்ப்பினை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளை வடிவமைத்துள்ளது.

ரியல் எஸ்டேட் :
சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்கும் நிறுவனங்கள் தாங்கள் கையகப்படுத்தும் நிலங்களில் 25 சதவீதத்தில் தொழிற்சாலையும் 25 சதவீத இடத்தில் சாலை, மின்சாரம் குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதியுள்ள 50 சதவீத இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு உருவாக்கி கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் வரி இல்லாமலே ரியல் எஸ்டேட் பிசினசெய்ய அரசே வழிவகை செய்துள்ளது.

மாநில அரசும் அம்போ :
இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளை சாரும். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி அதிகாரிகளுக்கு தான் இம்மண்டலத்தினை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு பொருளாதார மண்டலம் அரசுக்குள் அரசாக ; குறிப்பாக செல்வம் விளையாடும் அரசாக செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

கடந்த கால வரலாறு :
இப்படித்தான் இந்திய அரசு இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. பனியன் தொழிற்சாலைகள், தோல் பொருள் உற்பத்தி, இறால் மீன் வளர்ப்பு என்று கூறி நாசப்படுத்தியது போதாது என்று இன்று சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகின்றது. விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத்திட்டம் நிறைவேற்றலாம் என கூறப்படுகின்றது. ஆனால் இது கூட தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்ற மறுப்பதுதான். இத்திட்டத்தின் உள்ள தொழிற்சாலைகள் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு அவற்றோடு நமது சிறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.

சீனாவில்...
மேலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். சீனாவில் இத்திட்டம் 1986-ல் தொடங்கப்பட்டது. அங்கு லாயக்கற்ற தரிசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசே இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. இதற்கு
"காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்"
கையகப்படுத்தப்படும் நிலங்கள் அரசுக்கே சொந்தமானது. முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு பின்பு மற்ற நிறுவனங்களைப் போன்று வரி விதிக்கப்படுகின்றது. இம்மண்டலத்திற்காக நிலம் வழங்கும் அனைவரும் பங்குதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டு லாபம் தரப்படுகின்றது. இதன் மூலம் அந்நாடு 12 % பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா - சீனாவினை ஒப்பிட்டு பாருங்கள். இங்கோ கிராமப்புறம் திவாலாகி, விவசாயிகள் நிர்கதிக்கு ஆளாகும் சூழ்நிலை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தால் உருவாகியுள்ளது.

அரசிடம் எதிர்பார்ப்பு :
எனவே இம்மண்டலம் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும்.
நிலம் விலை குறித்து அனைத்து தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
நிலம் தொழிற்பேட்டையாக மாறுகின்றபோது நிலத்தை சார்ந்திருக்கின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று எழுந்துள்ளது. எனவே இதனை கிளர்ச்சி உருவாக்குவதன் மூலமே மாற்றங்களை நாம் உருவாக்க முடியும்.

செய்யுங்கள் :
இம்மண்டலத்திற்கு எதிராய் நாம் செய்ய வேண்டியது என்ன ?

  1. விவசாயத்தினை அடிப்படையாக கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழிற்துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
  2. நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
  3. வணிக நலன்களை கட்டிக் காக்கும் சுய உதவிக்குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்திப்பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் விதமாக தெரு, வார்டு, கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் குழுக்களே நிர்வகிக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கலாம் என அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
  4. எந்த தொழிலினை தொடங்கவும் அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்கும் மக்களை மய்யப்படுத்தும் "அதிகார மய்யம்" உருவாக்க அரசை கேட்க வேண்டும்.

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்