மனித உரிமைகள்

மனிதனின் அடிப்படை தேவைகள் - உணவு, உடை, இருப்பிடம். இவை மட்டும் இருந்தால் போதாது. அவன் மனித மாண்போடு வாழ தேவையானவைகளை நிறைவு செய்வதே மனித உரிமைகளாகும்.

எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள், சம உரிமை உடையவர்கள், பகுத்தறிவும், உள்ளுணர்வும் கொண்டவர்கள் (சுதந்திரமாக பிறந்து சாதி, மதம், கட்சிகள் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் ஜேக்குஸ் ரூசே) எனவே சக மனிதர்களிடம் சகோதரத்துவ உணர்வுடன் நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிறது மனித உரிமைக்கான உலக சாசனம்.

மனித உரிமைகளின் பிரிவுகள் : 

1. குடி உரிமைகள் (Civil Rights)

2. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

3. மனித உரிமைகள் (Human Rights)

குடி உரிமைகள் என்பது அந்தந்த நாட்டு அரசு அந்தந்த குடிமக்களுக்கு வழங்கும் உரிமையாகும்.

அ. வாழ்வுரிமை - பிறந்த இடத்தில் வசிக்க வழங்கப்பட்டுள்ள உரிமை.

ஆ. சுதந்திர உரிமை - பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இவற்றில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இ. சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை - இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள உரிமை.

ஈ. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படும் உரிமை - பாமர குடிமகன் முதல் முதல் குடிமகன் வரை சமமாக நடத்தப்படும் உரிமை.

உ. பாகுபாட்டிற்கு எதிரான உரிமை - சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை.

ஊ. தேசியத்தை சார்ந்திருக்கும் உரிமை - எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிறந்த தேசத்தை சார்ந்திருக்க உரிமை.

அரசியல் உரிமை : 

அ. கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை - ஒருவர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை.

 ஆ. சுதந்திரமாக கூட்டம் கூட்டும் உரிமை - சட்டத்திற்கு உட்பட்டு.

இ. இயக்கங்களை கட்டி எழுப்பும் உரிமை.

ஈ. வாக்களிக்கும் உரிமை - 18 வயதிற்கு நிரம்பியர் தான் விரும்புகின்ற நபருக்கு வாக்களிக்க உரிமை.

உ. அரசியலில் ஈடுபட உரிமை.

பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் : 

அ. வேலை பெறும் உரிமை - தன் தகுதிக்கேற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெறும் உரிமை.

ஆ. வேலையை தேர்ந்தெடுக்க உரிமை - தான் விரும்புகின்ற தொழிலை, வேலையை தேர்வு செய்யும் உரிமை.

இ. சொத்துரிமை - தன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் உரிமை.

ஈ. போதுமான ஊதியம் பெறும் உரிமை - உழைப்பிற்கேற்ற ஊதியம் கோர உரிமையுண்டு.

உ. கல்வி பெறும் உரிமை - அடிப்படை கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி வரை பெற உரிமை.

ஊ. குடும்பத்தை உருவாக்கும் உரிமை.

எ. சமூக பாதுகாப்பு பெறும் உரிமை - உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு கோரும் உரிமை.

ஏ. காப்பீடு செய்து கொள்ளும் உரிமை - தன்னுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் காப்பீடு செய்ய உரிமை.

ஐ. மருத்துவ உதவி பெற உரிமை.

ஒ. சட்டத்தின் வழியில் ஒவ்வொருவரும் போராடவும் ஒன்று கூடவும் உரிமையுண்டு.

அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) 

அடிப்படை உரிமைகள் என்பது அந்தந்த நாட்டிற்கு மட்டும் பொருந்தக் கூடியது. நமது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் வழங்கி இருக்கிறது.

1. பிரிவு 14-18 சமத்துவ உரிமை (Rights to equality)

2. 19 - 22 சுதந்திர உரிமை (Right to Freedom)

சுதந்திர உரிமை என்பது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என விரிவான விளக்கம் பெறுகிறது. அவைகள்

19(1) a பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் (Freedom of speech & Expression)
19(1) b ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Form Assembly)

19(1) c சங்கம் அமைக்கும் சுதந்திரம் (Freedom of Form association)

19(1) d இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம் (Freedom of Reside and Settle)

19(1) e இந்தியா எங்கும் தங்கி வாழும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

19(1) f தொழில், பணி, வணிகம் செய்யும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)

3. பிரிவு 23 - 24 சுரண்டலுக்கு எதிரான உரிமை (Rights to fight against Exploitation)

4. பிரிவு 25 - 28 சமய சுதந்திர உரிமை (Rights to freedom of Religion)

5. 29 - 30 கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமை (Cultural and educational Rights)

6. அரசியலமைப்பு தீர்வு வழிகள் (Rights of constitutional Remedies)

7. கருத்து சுதந்திரம் (Rights to Expression)

மனித உரிமைகள் (Human Rights)

மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.

மனித உரிமை என்பது ஒற்றை பரிமான நிலையில் நோக்காமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார உரிமைகளோடு இணைத்துப் பார்க்கின்ற பன்முக பார்வையாகும்.

மனித உரிமை என்னும் கட்டமைப்பை சூழ்ந்து குடிமக்கள், மக்கள் இயக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக பொருளாதார மேம்பாடு, மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என உள்ளது. இவைகளுக்கு மத்தியில் மனித உரிமைகளை காப்பது, செயல்படுத்துவது என்பது கடினம் என்றாலும் மனித உரிமைகளை பெறுவது நமது கடமையாகும். மனித உரிமைகளைப் பற்றி பேசும் போது, அதற்காக அரசிடம் போராடும் பொழுது பயங்கரவாதி அல்லது தீவிரவாதி என்று கூறி அடக்குமுறை கையாளப்படுகிறது.

காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :

- கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.

- கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  
 - 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.

- பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.

- கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

- கைதியை அடிக்கக் கூடாது.

மனித உரிமை சட்டங்கள் : 

1993 - மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். இதில் அரசியல் அமைப்பு சட்டம் 338ன் கீழ் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1992 - சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

1999 - மகளிர் நல பாதுகாப்பிற்கென தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

1950 - மனித வர்த்தகம் சம்பந்தமான பன்னாட்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

1923 - தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.

1926 - தொழிற்சங்க சட்டம்.

1936 - சம்பள சட்டம்.

1942 - வாராந்திர விடுமுறை சட்டம்.

1946 - தொழில் நிறுவன, வேலை நிலையானைகள் சட்டம்.

1947 - தொழில் தகராறு சட்டம்.

1948 - தொழிலாளர் காப்புறுதி சட்டம்.

1948 - தொழிற்சாலை சட்டம்.

1948 - குறைந்தபட்ச சம்பள சட்டம்.

1952 - தொழிலாளர் சேமநிதி சட்டம்.

1966 - பீடி, சிகரெட் தொழிலாளர்கள் வேலை நிபந்தனைகள் சட்டம்.

1971 - மருத்துவ முறையில் கருச்சிதைவு சட்டம்.

1976 - சம ஊதிய சட்டம்.

1986 - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.

1993 - பயங்கரவாத தடுப்பு சட்டம்

1994 - மனித உறுப்புகள் மாற்று சட்டம்.

போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு எட்டாதது" என்றார் பேரறிஞர் அண்ணா.

ஆம். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென்று தனித்தனி ஆணையங்களும், நீதி மன்றங்களும், உரிமை சாசனங்களும், பிரகடனங்களும் எவ்வளவோ உருவான பின்பும் ஆங்காங்கே மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் நிலைதான் இன்றளவும் தொடர்கின்றது. இந்நிலை மாற மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க சங்கங்களாக கூட்டமைப்புகளாக ஒன்றிணைவோம்.

தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS