போகுற போக்குல !

அம்மா பசிக்குது
சோறு போடுங்க
தயவுடன் கேட்டார்
வயதான பிச்சைக்காரர்.
இங்க சோறுமில்ல
ஒன்றும் இல்ல
போய்யா என அதட்டினார்
வீட்டுக்கார பெரியவர் !
பிச்சைக்காரர்
ஏக்கமுடன் நிற்க
உள்ளிருந்து
தாய்மையுடன் ஒரு குரல்
இருங்க அய்யா !
சோறுடன் வந்தாள் ‘அம்மா’
அழுக்குப் பாத்திரத்தில்
சோறு வாங்கி கொண்ட
பிச்சைக்காரர்
எங்கே அம்மா
கூட்டு பொரியல்,  அப்பளம் என திரும்ப கேட்க,
அம்மாவுக்கு கோபம் வந்தது,
விக்கிற விலைவாசியில
நீ இதையும் கேட்ப,
இதற்கு மேலயும் கேட்ப
போய்யா என சீறினார்.
ஏம்மா ! விலைவாசி ஏறுனதுக்கு
நான்தானா காரணம்
விவரமாக சொல்லுறேன் கேட்டுக்கம்மா.
உலகப்பொருளாதாரம் - சந்தை மயம்
தனியார்மயம் - தாராளயமயம்
உலக மயம் - திட்டம் பல வந்துருச்சி.
அமெரிக்க டாலர்
நம்ம உப்பு விலையை கூட
உயர்த்திடுச்சு.
பதுக்கலும் அதை
பாதுகாக்கும் “அரசு” தாம்மா காரணம்

தேவையில்லாத இலவசத் திட்டம்
ஆடம்பரமான அரசு விழாக்கள்
திட்டங்கள் வழியாக ஊழல் !
கட்சிகளின் மாநாடு - விரயச் செலவுகள்.

மக்களை மயக்க மானியம்
நாட்டின் வருமானம்
இப்படியாக வீணாகும் போது
அதை சரிகட்ட

அரசாங்கம் வரியைத்தான் கூட்டுவாங்க. வரிகள் ஏறும்போது
பொருட்களின் விலை உயரும்
என்பதுதானம்மா பொருளாதார விதி.
இதையயல்லாம்
யாரும்மா கேட்கிறது...
அதனால விலைவாசி ஏற்றத்துக்கு
ஆளும் அரசும்
ஆளப்படும் நம் மக்களும் தானம்மா பொறுப்பு...
இதையயல்லாம் பேச
நீ யாருன்னு கேட்குறீங்களா ?
நானும் இந்த நாட்டுல
ஓட்டு போட்ட
ஒரு பிச்சைக்கார பிரஜையம்மா...
என பெரிய விரிவுரையாற்றி...
நகர்ந்தார் அந்த வயதான
பிச்சைக்காரர்
போகுற போக்குல...
செய்திகள் சொல்லி கொண்டே...

G.லிண்டே, 
கங்கைகொண்டசோழபுரம்.