மதங்களின் பார்வையில் பெண்கள்...

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பினை நியாயப்படுத்தவும், கட்டிக் காப்பதற்கும் மட்டுமே மதங்கள் பயன்படுகிறது என்ற கருத்து சமூக சிந்தனையாளர்களிடம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி  ஆணாதிக்க கருத்துக்களையும் மதங்கள் கொண்டுள்ளது.

இந்து மதத்தில்..

காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் பெண்களை இழிவுபடுத்தி கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ய இந்து தர்மம் “பெண்கள் வேதம் ஓதுதல் கூடாது. யாகம் செய்தல் கூடாது. துறவறம் காணவும் கூடாது. மேலும் பெண்கள் அச்சத்தின் விளைவாக பிறந்தவள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு  அடக்கி ஆள வேண்டியவள்” என கூறுகிறது.
மனுதர்மமோ “பெண்கள் சிறு வயதில் பெற்றோரையும், முதுமையில் பிள்ளைகளையும் இளமையில் கணவனையும் சார்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
வர்ணாசிரம தர்மமோ “கர்ப்ப கிரகத்தில் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. இயற்கையான மாத விடாய் தீட்டாகும்” என கூறுகின்றது.
ஆனால் இதற்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாடுகளில் பெண்கள் சம உரிமை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதுதானே உழைக்கும் மக்களின் தனி அம்சமாக உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில்...

பெண்ணால் உருவானதே பெரும்பாவமும், பெருஞ்சாபமும் ஆகும். அதனால் பெண்களை என்றும் அவர்களின் கணவன் ஆட்சி செய்வான் எனக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 11,14 ம் அதிகாரங்களில் பெண்ணடிமை சாசனமே படைக்கப்பட்டுள்ளது.
திருச்சபை நிர்வாகத்தில் கூட ஆண்களே அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். சமயச் சடங்குகளில் கூட பெண்கள் முன்னுரிமை பெறுவதில்லை.

முஸ்லீம் மதத்தில்...

பெண்கள் சமயக் குருக்களாக, ஆக முடியாது. தொழுகையில் பங்கு பெற முடியாது. பெண்கள் அழகையோ. அணிகலன்களையோ வெளிப்படையாக காட்டக் கூடாது. இதனால் தான் இந்திய முஸ்லீம் பெண்கள் “பர்தா” முறையினை பின்பற்றுகின்றனர்.
ஓர் ஆண் தலாக் ! தலாக் ! தலாக் ! என மூன்று முறை கூறினாலே பெண் விவாகரத்து செய்யப்படுகிறாள். ஆனால் பெண்களுக்கு இந்த உரிமையில்லை. முஸ்லீம் பெண்கள் பிற ஆடவருடன் பேசக் கூடாது என தடை செய்யப்படுகிறாள்.