பெண்கள் நாட்டின் கண்கள்

முன்னுரை :
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற நாமக்கல் கவியின் கூற்று முற்றிலும் உண்மையானது. எந்த நாடு அல்லது சமூகத்தில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களோ அந்த சமூகமே சிறந்த சமூகமாகும். உலகில் மனிதர்கள் அனைவரையும் தனித்தனியாக தன்னால் கவனிக்க முடியாது என்பதால் தான் இறைவன் பெண்ணை படைத்தான் என்பார்கள். உண்மைதான்... அதை மெய்ப்பிக்கும் வகையில் தாய்மொழி, தாய்நாடு, கங்கை, காவிரித்தாய் என்று பெண்களை தாயாக பாவிக்கும் சமூகம் நமது பாரத சமூகமாகும்.

சங்ககால பெண்கள் : 
சங்க காலத்தில் அவ்வை, மாசாத்தியார், பொன்முடியார், கங்கை பாடினியார், பாரி மகளிர் என்றும் 30-க்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் ஆணுக்கு சமமாக கல்வி கற்று சமூகத்தில் உயர்நிலையில் இருந்துள்ளதை அறிகிறபோது ஆணுக்கு சமமாக பெண்கள் நடத்தப்பட்டு இருக்கின்றனர் என்பது உறுதியானது. ஆனால் இடைக்காலத்தில் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? பேதமை என்பது மாதர்க்கு அணிகலன் என்று கூறி அடிமையும், கொடுமையும் செய்யப்பட்டனர்.

பெரியார், திரு.வி.க, பாரதி, முத்துலெட்சுமி, அம்பேத்கார், தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் பெண்அடிமைத் தனத்தை உடைத்தெறிந்தனர். குடத்திலிட்ட விளக்குகளாய் இருந்த பெண்களை குன்றிலிட்ட விளக்காய் ஒளிர செய்தனர். அவர்களின் சீரிய முயற்சியால் பெண்கள் தங்களின் சுய சக்தியை உணர்ந்து முன்னேற ஆரம்பித்தனர்.

தியாகத்தின் மறு உருவம் : 
தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று பன்முக பரிணாமம் பெறும் பெண்கள் தியாகத்தின் மறு உருவமாக திகழ்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றக்கூடியது மட்டுமல்ல, வணங்கத்தக்கதும் ஆகும். அதனாலேயே பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் ஆதாரமாகிய நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி அழைக்கிறோம். உலகத்திலேயே மிகவும் போற்றத்தக்கதாக தாய்மையை வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகத்திற்கும், உழைப்பிற்கும் கைமாறு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பெண்கள் படும் இன்னல்கள் :
இத்தகைய புகழ்வாய்ந்த பெண்கள் பல இன்னல்களையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை போன்றவை இந்த நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. வரதட்சணையின் தாக்கத்தால் முதிர்கன்னிகளாக வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். அவர்களின் துயர்களை போக்க மத்திய, மாநில அரசுகளும் வரதட்சணை தடைச்சட்டம், பாலியல் கொடுமைகள் தடைச்சட்டம், பெண் கல்வி சட்டம், சொத்துரிமை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

இந்த சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. பயன்பாட்டுக்கு வரவேண்டும். இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் வரதட்சணை இல்லாத திருமணங்களை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். "ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என்று கவிதை வரிகளில் சொல்லியவற்றை கவிதையோடு நிறுத்திவிடாமல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் சமூகம் உயர்வானதொரு இடத்தை அடைய முடியும்.

சாதித்த பெண்கள் : 
ஆனால் இந்த தடைகளை எல்லாம் மீறி சாதிக்க பெண்களும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஆண்டாள், அரசியலில் இந்திரா, அறிவியலில் கல்பனா சாவ்லா, மருத்துவத்தில் முத்துலெட்சுமி, கணிதத்தில் சகுந்தலா, சேவையில் அன்னை தெரசா, விளையாட்டில் பி.டி.உஷா, நீதித்துறையில் பாத்திமா பீவி, காவல்துறையில் கிரண்பேடி என்று இந்திய வரலாற்றில் கோலோச்சியவர்கள் ஏராளம். மேலும் பச்சேந்திரிபாய், அருந்ததிராய் போன்ற பெண்கள் பெண் இனத்திற்கே முன் உதாரணமாக திகழ்ந்தவர்கள். தற்போது சுதந்திரம் பெற்று 60-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் தனது அயராத உழைப்பால், தன்னம்பிக்கையால் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்று இருக்கிறார் பிரதீபா பட்டீல்.

முடிவுரை : 
ஆகவே அனைத்துப் பெண்களும் ஆற்றல் படைத்தவர்களே, அவர்களின் ஆற்றல் வெளியுலகுக்கு தெரியாமலேயே அழிந்து போவதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அதற்கு காரணம் அவர்களின் கல்லாமையே. ஆகவே அனைத்துப் பெண்களும் கல்வி என்ற திட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும். பெண்கள் நாட்டின் கண்களாகும். அத்தகைய பெருமை வாய்ந்த பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு சமமான கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாரதம் உலக அரங்கில் வீரு நடை போட முடியும்.

- P.அருண்பிரசாத், JKM 1051