மூலிகை மருத்துவம் - செய்முறை விளக்கம்

கடந்த இதழில் மூலிகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விவரங்களை வாசித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இம்மாத இதழில் கிராமபுறங்களில் எளிதாக பரவும் நோய்கள் பற்றியும் அதற்குரிய காரணங்கள் பற்றியும், அறிகுறிகள் பற்றியும் தீர்விற்கான மருத்துவம் பற்றியும் மேலும் மருந்து செய்முறை பற்றியும் இவ்விதழில் காண்போம்.

மருந்துகளின் வகைப்பாடு :
சித்தமருத்துவத்தில் 64 வகையான மருந்துகள் உண்டு.

32 உள் மருந்து

32 வெளி மருந்து

சூரணம் : (பொடி செய்தல்) சூரணம் என்பது மூலிகையின் இலை, தண்டு, பூ, வேர், காய், கனி போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர காயம் (துணியால் சளிப்பது) செய்ய வேண்டும். இது 6 மாதங்கள் வன்மையுடன் இருக்கும்.

தைலம் : மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் கலந்து கொள்வது (பல முறை காய்ச்சுதல் என்பது காய்ந்து கொண்டிருக்கும் தைலத்தை ஒரு குச்சியில் எடுத்து அனலில் காட்டினால் சொட, சொட என சத்தம் கேட்கும்.  தைலம் ஒரு வருடம் வன்மையுடன் இருக்கும்.

மனப்பாகு : மனப்பாகு என்பது மூலிகை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி தேன் பதத்தில் இறக்கி பத்திரப்படுத்தி பயன்படுத்துவது 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

லேகியம் : லேகியம் என்பது மூலிகைகளுடன் மருந்து பொருட்களும், சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி தேன் அல்லது நெய் சேர்த்து இறக்கி பயன்படுத்துவது (கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் லேகியத்தை கரண்டி அல்லது கையில் எடுத்தால் கம்பி போல வரும்)

செந்தூரம் : செந்தூரம் என்பது பாசானம் மற்றும் உலோகங்களை மூலிகை சாறுடன் சேர்த்து செந்நிறம் காணும் வரை எரித்து பொடி செய்து வைத்துக் கொள்வது. 500 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

பஸ்பம் : பஸ்பம் என்பது பாசானம் அல்லது உலோகங்களை மூலிகை சாறில் அரைத்து வில்லை செய்து மண் சீலை செய்து காயவைத்து மருந்தின் அளவிற்கேற்ப விராட்டி புடமிட்டு எடுக்க வேண்டும்.

இது 900 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

குறிப்பு : 
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தனியாக சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் ஒரு அரிசி எடை அளவுதான் சாப்பிடவேண்டும்.
  • செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தீராத வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கை நீலக்கலரில் மாறினால் தீராத வியாதி என்பதாகும்.
கசாயம் : கசாயம் என்பது உலர்ந்த மூலிகை சரக்குகளை இடித்து நீர் விட்டு 8-ல் 1 பங்காக காய்ச்சி வடிகட்டி எடுப்பது. 3 மணி நேரம் வன்மையுடன் இருக்கும்.

கிராமங்களில் பரவும் பொதுவான நோய்கள் :
காலரா, அம்மை, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, கக்குவான் இருமல், சோகை, அக்கி, சிரங்கு, வாந்தி, பேதி, மூலம், புற்றுநோய், தொழுநோய், தலைவலி, பல் வலி, காது வலி, கண் வலி, விரல் சுத்தி, கட்டிகள், காசநோய், ஆஸ்த்துமா, குடல் புண், மூட்டு வலி, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, தேமல், வாதநோய், வயிற்று வலி, மாரடைப்பு, கர்ப்பப்பை கோளாறு, நெஞ்சு வலி, தொண்டையில் சதை வளர்தல் (டான்சில்) கால் ஆணி, பித்த வெடிப்பு, பொடுகு, குடற்புழு.

1. நோய் - வயிற்றுப்போக்கு

காரணங்கள் :
  • - ஜீரணமின்மை,
  • - எண்ணெய் பதார்த்தங்கள்,
  • - நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது
  • - மாவு பண்டங்கள்,
  • - காரமான உணவு,
  • - அதிக கண் விழிப்பு,
  • - அதிக பிரயாணம்
அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.

மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

மருந்து செய்முறை :

காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :
காட்டாத்தி பூ ¼ கிலோ
ஓமம் ¼ கிலோ

ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.

காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

2. நோய் :  சளி, இருமல்

காரணங்கள் :
  • - குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
  • - குடிநீர் மாறுபடுதல்.
  • - இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
  • - நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
  • - உள் நாக்கு வளர்ச்சி
அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :
  • - சந்திர கலா லேபம்
  • - துளசி மனப்பாகு
  • - ஆடாதொடை சூரணம்
  • - கற்பூராதி தைலம்
  • - திரி கடுகு சூரணம்
  • - தூதுவலை லேகியம்
மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு - 1 லிட்டர்
பனைவெல்லம் - 1 கிலோ
சீரகம் - 200 கிராம்
இஞ்சி - ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) - டி கிலோ
ஆடாதொடை - 200 கிராம்
துளசி - 100 கிராம்
ஓமவல்லி - 100 கிராம்
கண்டங்கத்திரி - 50 கிராம்
இன்பூரல் - 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
சித்தரத்தை - 25 கிராம்
அதிமதுரம் - 25 கிராம்
இஞ்சி சாறு - 50 மில்லி
பனைவெல்லம் - 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

3. நோய் : ஆஸ்துமா 

காரணங்கள் : குளிர்ந்த நீர், சுகாதாரமின்மை,

அறிகுறிகள் : இருமல், தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி, சளி கட்டியாக இரத்தத்துடன் வருதல், மாலையில் காய்ச்சல், உடம்பு இளைத்தல்

மருத்துவம் :
  • திரி கடுகு சூரணம்
  • துளசி மனப்பாகு
  • ஆடாதொடை சூரணம்
  • தூதுவலை லேகியம்
  • சிவனார் அமிர்தம்
  • வெள்ளருக்கு குளிகை
தொகுப்பு : A. சந்தியாகு