சுற்றுச் சூழலைக் காப்போம்

ஒன்பது கோள்களும் ஒன்றான "பூமி" அண்ட வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. மற்ற எந்த கோள்களுக்கும் இல்லாத பலசிறப்பு அம்சங்களை குறிப்பாக உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற அற்புதமான சூழலைப் பெற்றுள்ளது. ஆனால் பூமியின் நலமும், வளமும், சூழலும் குன்றிக் கொண்டே இருக்கின்றது. வளிமண்டலத்தில் காற்று, நீர், நிலம் மாசு காரணமாக உயிரினங்கள் அனைத்தும் தாமாகவே அழியும் நிலை உருவாகியுள்ளது. வானிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரித்துள்ளது. சோலை வனங்கள் அனைத்தும் பாலைவனங்களாக மாறியுள்ளன. கோடிக்கணக்கான உயிரினங்களில் ஓர் உயிரினம் தான் மனிதன். இம் மனிதன் பூமியில் மற்றும் வளிமண்டலத்தில் கிடைக்கக் கூடிய இயற்கைப் பொருட்களை கைவசப்படுத்திவிட்டான். மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு 90 விழுக்காடுக்குமேல் தன்னைச் சார்ந்த இயற்கைச் செல்வத்தை அழித்து விட்டான். மனிதன் செய்த அனைத்து இயற்கை அழிவுகளும் சமன்படுத்தப்படவேண்டும்.

‘பாரதநாடு பழம் பெரும் நாடு' என்ற புகழுக்கேற்ப நம் நாடு பழமை வாய்ந்த நாடு. நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவையே இதற்குத் தக்க சான்று. நமது இந்தியத் துணைக் கண்டம் உருவாகி பல கோடிக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு பழமை வாய்ந்த, இயற்கை வளம் நிறைந்த நம் இந்திய நாட்டில் தான் சூழல் சீர்கேடுகள் நிறைய இருக்கின்றன. தொழிற்புரட்சி என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. மனித சமூகமின்றி இயற்கை தனித்து வாழும். ஆனால் இயற்கையின்றி மனித சமூகம் வாழ முடியாது.

உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, முப்பது கோடி பேர் உடல்நிலை அவதி உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நவீன வீட்டு உபயோகச் சாதனங்களால் கரியமில வாயு நிறைய வெளிப்படுகிறது. இதனால் பூமி சூடாகி வானிலை மாற்றமும் சூழல் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு 800 கோடி டன் வளமான மண் கடலிலே கரைந்து வீணாகின்றது. கால வெள்ளத்தில் பாறைகள் பொடிந்து, பொடிந்து மண் மலர்ந்தது, இம்மண் மலர்ச்சிக்கு அணை போட்டால், மண்ணாக மாறும் செயல் தடைபடும். உருவான மண் கரைந்து வெளியேறும். நிலமானது நிலைத்து நிற்குமே தவிர வளமான மண் இராது. நவீன வேளாண்முறைகளால், விவசாயத்திற்கு ஆதாரமான நிலம், நீர் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், புது இரக விதைகள் இவற்றால் மண் வளம் குன்றிவிட்டது. மண் அரிப்பு, உவர்ப்பு, களர் ஆதல் போன்ற பல வழிகளில் மண்ணின் இயல்பான தன்மையில் மாறுபாடுகள் பல ஏற்பட்டுள்ளன. இன்றைய நகர் மயமாதல், தொழில் நுட்பம் போன்ற இவற்றால்

ஆண்டிற்குச் சராசரியாக 0.8 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடு நிலப்பரப்பை நிரந்திரமாக நாம் இழந்து வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் ‘உலக பூமி நாள்' கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று ‘உலகளவில் நினை உனதளவில் செயல்படு' (Think Globally Act Globally) என்ற கூர் வார்த்தைக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பூமியிலிருந்து நம்மால் விரட்ட இயலும். நமது சுற்றுப் புறங்களில் வீணான காகிதங்களை மறு சுழற்சிக்கு அனுப்ப உதவ வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு இணைந்த பொருட்களை உற்பத்தி செய்ய வலியுறுத்த வேண்டும். கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது துணிப்பைகள், சணலால் ஆன பைகன், உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் அபாயத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

‘அன்னை பூமி, நமக்கென்ன செய்தது என்று கேட்காதே

அன்னை பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்'.

என்கிறார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி. நாம் வாழும் இந்த செழுமையான பூமியை பிறர் (நமது சந்ததியினர்) வாழ சிறப்பான இடமாக விட்டுச் செல்ல வேண்டும்.

மனவுறுதியும், சேவை மனப்பான்மையும் நிரம்ப பெற்ற நாம் நம்முடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இப்பூமியின் சுற்றுச் சூழல் நலம் காக்க ‘இயற்கை சக்தி'களை நாம் மாசு படுத்தக் கூடாது. இயற்கையும், சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையுமென உணர்ந்து நாம் சுற்றுச் சூழல் காக்க மரம் நடுதலை நம்மூர்களில் உள்ள மக்களுக்கு ஊக்குவித்து மரம் நடுதல் பணியை நாமும் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகளை (நெகிழிப்பைகள்) முடிந்தவரை உபயோனப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். நம் வாழ்க்கையில் மேற்கூறியவற்றை செயல்படுத்துவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியை வாழ விடலாம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அழகிய உலகினை விட்டுச் செல்லாலம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட்.,
விரகாலூர்