மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !!

"மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

"இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

"மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்" இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. "நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

"ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு"

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

"பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்"

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.

தொகுப்பு : குடந்தை அல்ஃபி