இயற்கை வேளாண்மை

உலகத்துக்கே உணவு “படைக்கும்” விவசாய மக்களுக்கு பசுமையான வணக்கம்
வானம் பேஞ்சிக் கெடுக்கும், இல்லேன்னா
காஞ்சிக் கெடுக்கும்.
இது நமது நாட்டு பழமொழி.
ஆம். காலம் தவறிய பருவமழை,  ஒரே நேரத்தில் கடும் தொடர் மழை, கடுமையான காற்று, புயல், வெள்ளம் இப்படியாக விவசாயம் பாதிக்கப்படும். அல்லது  மழையே இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போகும். இதுதான் விவசாய நிலைமை. பயிர் அறுவடை காலங்களில் தேவையில்லாமல் மழை பெய்து விவசாயி கண்ணீரோடு கடனாளியாக மாறும் நிலை தொடர் கதையாகவே உள்ளது. எனவேதான் நமது இந்திய நாட்டு விவசாய முறையை “சூதாட்டம்” என்பார்கள்.
இது இப்படி இருக்க நம்ம விவசாயிகள் விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்கின்றனர். நவீன இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு, நீர், அறுவடை இப்படியாக இவைகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால் செலவினங்களை கணக்கிடும் போது விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் நாம் விவசாயத்தில் சுய சார்பு தன்மையை இழந்து மற்றவர்களை (உர கம்பெனி, கருவிகள்) சார்ந்து விவசாயம் செய்கின்றோம்.  மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, நீரை பாதுகாக்கும் முறைகள், (நீர் மேலாண்மை) பயிர் சுழற்சி முறைகள் இவைகள் பற்றி விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை கற்றுக்கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், அரசும் கண்டு கொள்வதே இல்லை.
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசே நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
“சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் வழியாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக தளங்களாக நிலம் மாறி வருகின்றது.
எனவே பெரும் திரளாக விவசாயிகள் கூடி நமது நிலைமையை பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது விவசாய முறையை நமக்காக மாற்றி மரபு விவசாய
முறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.
இந்த இதழில் “அமுத கரைசல்” அதாவது பயிர் ஊக்கி தயாரிப்பது பற்றி காண்போம்.
         பசுமாட்டு சாணம் - 10 கிலோ
ஹோமியம் - 10 லிட்டர்
வெல்லம் - 2 கிலோ
தண்ணீர் - 100 லிட்டர்
இவைகளை ஒரு நீர் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பெரிய கேனில் போட்டு கரைசலாக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு தடவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கலக்கி விடவேண்டும். ஒரு நாள் கழித்து நமது கரைசலை பாசன வாய்க்காலில் லேசாக தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம். கன்றுகள், காய்கறி செடிகள் இவைகளுக்கு குடிநீர் ஊற்றும்போது இக்கரைசலை கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனத்திலும் பாசனக் குழாய் வழியாகவும் பயிர்களுக்கு கொடுக்கலாம். இக்கரைசல் 1 ஏக்கர் நிலத்திற்கு உரியது. கடலை, நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு இக்கரைசலை பாசனம் மூலம் பயிர் ஊக்கியாக கொடுக்கலாம்.
பயன்கள் :
1. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய மூன்று சத்தும் சரிசம விகிதத்தில் பலன் கொடுக்கும். (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து)
2. மண் வளம் பெருகும். மண்புழுக்கள் மேல் நோக்கி வரும்.
3. மண்ணில் அதிகமாக பரவும். இதனால் பயிர் அடர்த்தி பெருகும்.
4. காய்ப்பு பருவத்தில் மணிகள் அதிகமாக பெருகும்.
5. பயிர்களுக்கு பயன் தரும் பூச்சிகளை வளர்க்கும்.
6. குறைந்த செலவில் பயிர்களுக்கு லாபம் தரும் ஊட்டச்சத்து (TONIC) ஆகும்.

D.A. ஜார்ஜ், ஒருங்கிணைப்பாளர்
KMSSS