வாழ்க்கையெனும் தத்துவம்

தற்போது இருக்கும் நிலையிலிருந்து தான் விரும்பும் நிலைக்கு வர முயற்சி செய்யும்போது, எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கையாகும். ‘எதிலிருந்து தொடங்குகிறது வாழ்க்கை ; எங்கு முடிகிறது’ என்ற சிந்தனை மனதில் எழும்ப வேண்டும். சிந்தனையின் உயிர்ப்பு இல்லையயனில் மனித வாழ்க்கை இறந்த நிலைக்கு ஒப்பாகும். தன்னைப்பற்றி முடிவில்லாத எண்ணற்ற சுயசிந்தனைகள் வாழ்க்கையாக பரிணமிக்கிறது. “ஒருவன் எப்படி இறந்தான் என்பதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இதைவிட அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். ஆனால் அதைப்பற்றி நாம் ஒருவரும் பேசுவதில்லை” என்கிறார் சாமுவேல் ஜான்சன். மனிதனால் பறவையைப் போன்று காற்றில் பறக்க முடியும். மீன்களைப் போன்று தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் மனிதனைப் போன்று அவனால் சில நேரங்களில் நடந்து கொள்ள முடிவதில்லை.

வாழ்க்கையில் எப்போதும் வாய்மூடி மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் சில நேரங்களில் விசுவரூபம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முத்திரை பதிக்க முடியும், மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திடக்கூடியதாகும்.

ஒரு நேர்காணலுக்கு பல இளைஞர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் எல்லாம் வடிகட்டிப் பார்த்தபோது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டும் மிஞ்சினார்கள். இருவரும் தகுதிகளைப் பொறுத்தவரையில் சரிநிகர் சமானம் பெற்றவர்களாக விளங்கினார்கள். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு வினாவைக் கேட்டது. உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லையயனில் எப்படி உணருவீர்கள் ? முதல் இளைஞன், “நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று பதில் சொன்னான். நீ போகலாம் என்று வல்லுநர் குழுவினர் கூறினர். இரண்டாவது இளைஞன் அதே வினாவிற்கு “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கினர் வல்லுநர் குழுவினர். கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இரண்டு இளைஞர்களும் சொன்ன வினா விடைகளில் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புலனாகும். ‘நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்’ என்று நம்பிக்கையில்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில் மறுமொழி சொன்னான் முதல் இளைஞன். ஆனால் இரண்டாவது இளைஞன் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சி மிக்க மனநிலையோடு, “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்” என்று உரைத்தான்.

இந்த நிகழ்விலிருந்து நம் வாழ்வு மலர வேண்டுமென்றால், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதிலே மாபெரும் சக்தி மறைந்திருக்கிறது. முதல் இளைஞனிடம் அவநம்பிக்கையும், உபயோகமற்ற எண்ணங்கள் இருந்ததினால் அவன் வேலை வாய்ப்பை இழந்தான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது வீடு அல்ல. வாழ்க்கை என்பது நீண்ட சாலை, அது நகரம் அல்ல. நமக்கு கிடைக்கும் இன்பங்களும், மகிழ்ச்சிகளும் சாலையில் இருக்கும் பயணியர் விடுதிகள், அங்கு நாம் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் வாழ்க்கையெனும் பயணத்தை தொடங்குகிறோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு உரிய வாய்ப்பு கட்டாயம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது என்று கவியரசு கண்ணதாசனின் ஆசிரியர் வகுப்பில் அடிக்கடி கூறுவாராம். உண்மையில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வைர வரிகள் இவை. இன்னும் வாய்ப்பு வரவில்லையே என்று, மூடிய கதவையே பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு பக்க கதவுகள் மூடியிருந்தால் என்ன ? இன்னொரு பக்க கதவுகள் திறக்கும் ; வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலேயே  காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்காமல், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், உரிய வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் காலடி எடுத்து வைத்தால் நம் வாழ்வு மலரும் என்பது திண்ணம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எஃபில்., பி.எட்.,
விரகாலூர்